Skip to main content

மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவை பதவியேற்பு! (படங்கள்)

Published on 07/05/2021 | Edited on 07/05/2021

 

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று (07/05/2021) காலை 09.00 மணிக்கு நடைபெற்ற பதவியேற்பு விழாவில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். அவருக்குத் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்துவைத்தார். மேலும், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

 

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை தொடர்ந்து, அவரது தலைமையிலான அமைச்சரவையும் பதவியேற்றது. அதன்படி, புதிதாக உருவாக்கப்பட்ட நீர்வளத்துறை அமைச்சராக துரைமுருகன் பதவியேற்றுக்கொண்டார். அதேபோல், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக கே.என். நேரு; மருத்துவம், மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சராக மா. சுப்பிரமணியன்; வணிக வரி, பதிவுத்துறை அமைச்சராக பி.மூர்த்தி; பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக எஸ்.எஸ்.சிவசங்கர்; இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சராக பி.கே.சேகர் பாபு; நிதித்துறை மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சராக பி.டி.ஆர்.தியாகராஜன் ஆகியோர் பதவியேற்றுக்கொண்டனர்.

 

பால் வளத்துறை அமைச்சராக சா.மு.நாசரும், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக கே.எஸ்.மஸ்தானும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக அன்பில் மகேஷ் பொய்யாமொழியும், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை அமைச்சராக சிவ.வீ.மெய்யநாதனும், தொழிலாளர் நலத்துறை மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சராக சி.வி.கணேசனும், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக மனோ தங்கராஜும், சுற்றுலாத்துறை மற்றும் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் அமைச்சராக மதிவேந்தனும், ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சராக கயல்விழி செல்வராஜும் பதவியேற்றுக்கொண்டனர்.

 

கூட்டுறவுத்துறை அமைச்சராக ஐ. பெரியசாமியும், உயர்கல்வித்துறை அமைச்சராக பொன்முடியும், பொதுப்பணித்துறை அமைச்சராக எ.வ. வேலுவும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சராக எம்.ஆர்.கே. பன்னீர்செல்வமும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சராக கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனும், தொழிற்துறை, தமிழ்ப்பண்பாட்டுத் துறை அமைச்சராக தங்கம் தென்னரசுவும், சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சராக எஸ். ரகுபதி, வீட்டு வசதித்துறை அமைச்சராக முத்துசாமியும், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சராக பெரியகருப்பனும், ஊரக தொழில்துறை தா.மோ. அன்பரசனும், செய்தித்துறை அமைச்சராக சாமிநாதனும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துரை அமைச்சராக கீதா ஜீவனும், மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சராக அனிதா ராதாகிருஷ்ணனும், போக்குவரத்துத்துறை அமைச்சராக ராஜ கண்ணப்பனும், வனத்துறை அமைச்சராக கா. ராமச்சந்திரனும், உணவுத்துறை அமைச்சராக சக்ரபாணியும், மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சராக செந்தில் பாலாஜியும், கைத்தறித்துறை அமைச்சராக ஆர். காந்தியும் பதவியேற்றுக்கொண்டனர்.

 

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் முதலமைச்சருடன் சேர்த்து மொத்தம் 34 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். 

 

பதவியேற்பு விழாவில் வைகோ, திருமாவளவன், ப. சிதம்பரம், முத்தரசன், கி. வீரமணி, வேல்முருகன், ஈஸ்வரன், காதர் மொய்தீன், கே.எஸ். அழகிரி, திருநாவுக்கரசர், சரத்குமார், கமல்ஹாசன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். அதேபோல், அதிமுக சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், நவநீதகிருஷ்ணன், தனபால் மற்றும் பாஜக சார்பில் இல. கணேசன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். மேலும், மு.க. அழகிரி மகன் தயாநிதி அழகிரி, ஐ- பேக்கின் பிரசாந்த் கிஷோர் மற்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் குடும்ப உறுப்பினர்கள் உதயநிதி ஸ்டாலின், அவரது மனைவி கிருத்திகா ஸ்டாலின், சபரீசன் மற்றும் செந்தாமரை, துர்கா ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

 

அமைச்சர்களாக பதவியேற்ற அனைவரும் ஆளுநருடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். 

 

இதனிடையே, மு.க. ஸ்டாலின் முதலமைச்சராகப் பதவியேற்றதைக் கண்டு அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆனந்த கண்ணீர் சிந்தினார். 

 

 

சார்ந்த செய்திகள்