திருப்பூர் மாவட்டத்தில் தி.மு.க. சார்பில் நடைபெற்ற 'தமிழகம் மீட்போம்' பொதுக்கூட்டத்தில் காணொளி மூலம் கலந்துக்கொண்டு பேசிய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், "முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி போன்றோர் கொங்கு மண்டலத்துக்கு ஒன்றும் செய்யவில்லை. திருப்பூரில் சிறு, குறு நிறுவனங்கள் செயல்பட முடியாமல் திணறிக்கொண்டிருப்பதற்கு அரசுதான் காரணம். கல்வித்துறையில் முதல்வருக்கும், செங்கோட்டையனுக்கும் பல்வேறு முரண்கள் இருக்கின்றன.
ஜி.எஸ்.டி. வரியால் துணி நூல் துறைக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கரோனாவை பயன்படுத்தி தொழிலாளர் விரோத சட்டங்களை மத்திய அரசு இயற்றியுள்ளது. திருப்பூர் குமரனை போல் போராட வேண்டிய நிலைக்கு இளைஞர்கள் தள்ளப்பட்டுள்ளனர். டாலர் சிட்டியாக இருந்த திருப்பூர் தற்போது 'டல்' சிட்டியாக மாறி வருகிறது. திருப்பூரில் தொழில் வளர்ச்சி இல்லாமல் போனதற்கு அரசுகளின் தவறான பொருளாதார கொள்கையே காரணம்." என குற்றம்சாட்டியுள்ளார்.