நெல்லை மாவட்டத்தின் பங்களா சுரண்டை நகரிலுள்ள பேரன்புரூக் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியையாக நியமிக்கப்பட்டவர் ஆசிரியை வசந்தி ஹாசிராணி. இவரது பதவி உயர்வு பள்ளி நிர்வாகத்தால் 02.06.2018ல் வழங்கப்பட்டுள்ளது. பின்னர் முறைப்படி தென்காசி கல்வி மாவட்டக் கல்வி அலுவலரான ஷாஜகான் கபீரின் ஒப்புதலுக்காக விண்ணப்பித்திருந்தார். ஆனால் மாவட்டக் கல்வி அலுவலகம் அவரது பதவி உயர்வை அங்கீகரிக்கவில்லை மேலும் இழுத்தடித்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட ஆசிரியை வசந்தி ஹாசிராணி தனது பதவி உயர்வுக்கு அங்கீகாரம் வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதியரசர் சுப்பிரமணியன், திட்டமிட்டே தென்காசி மாவட்டக் கல்வி அலுவலர் இந்த அங்கீகாரத்தை வழங்காமல் இழுத்தடித்திருக்கிறார். ஆகவே அவருக்குப் பத்தாயிரம் ரூபாய் ஆபராதம் விதிக்கப்படுகிறது. அதனை தலைமை நீதிபதி நிவாரண கணக்கில் பத்து நாட்களுக்குள் செலுத்த வேண்டும். மேலும் இந்த விவரங்கள் மாவட்டக் கல்வி அலுவலரின், பணிப்பதிவேட்டில் பதிவு செய்யப்பட வேண்டும் என்று உத்தரவிட்டார். அது மட்டுமல்ல இவரைப் போன்ற கல்வி அதிகாரிகளால்தான், தமிழகத்தின் கல்வித்தரம் அதள பாதாளத்திற்குப் போய்விட்டது. இரண்டாவது இடத்தில் இருந்து 18 வது இடத்திற்குத்தள்ளப்பட்டுவிட்டது. என்று வேதனையோடு சுட்டிக்காட்டி இருக்கிறார் நீதியரசர்.
இத குறித்து நாம் மாவட்டக் கல்வி அலுவலர் ஷாஜகான் கபீரைத் தொடர்பு கொண்டபோது,
அவர் சரியான முறையில் அணுகவில்லை. எங்களிடம் தெரிவிக்காமலே நீதிமன்றம் சென்றுவிட்டார். எங்களிடம் சொல்லியிருந்தால் முடித்திருப்போம். அவருக்கான ஆர்டர் போடும் நிலையில் தானிருந்தோம் அங்கீகரித்து விட்டோம். அதற்குள்ளாக நீதிமன்றம் சென்று விட்டார். நீதிமன்ற உத்தரவை நாங்கள் மறுதினமே ரிவோக் செய்து விட்டோம் என்கிறார்.
தென்காசி கல்வி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆசிரியர்கள், குறிப்பாக அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் தங்களது பதவி உயர்வு, ஊதிய உயர்வு பி.எப். கடன் உள்ளிட்ட பல்வேறு நிவாரணம் பொருட்டு மாவட்டக் கல்வி அலுவலகம் வந்துதான் ஆகவேண்டும். ஆனாலும், அவர்களின் கோரிக்கைகள் காரணமில்லாமல் இழுத்தடிக்கப்படுகின்றன என்று சொல்லும் ஆசிரியர்கள், தமிழகத்தில் இதுவரை எந்தக் கல்வி அதிகாரியும் இப்படி ஒரு கண்டனத்தைப் பெற்றதில்லை. என்கிறார்கள்.
கல்வித்துறையில் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது இத் தீர்ப்பு.