கொல்லிமலையில் காலி மதுபாட்டில்களை பொது இடங்களில் வீசியெறிய தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு; நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை மலைப்பகுதிகளில் மதுபானங்களை குடித்துவிட்டு காலி பாட்டில்களை சாலையோரங்கள், விளைநிலங்கள், வனப்பகுதிகள், பொது இடங்களில் போடுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
கொல்லிமலையில் சோளக்காடு, செம்மேடு, செங்கரை பகுதிகளில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபான பாட்டில்களுக்கு வாடிக்கையாளர்கள் அரசு நிர்ணயம் செய்த விலையை விட 10 ரூபாய் கூடுதலாக செலுத்தி, மதுபானங்களை வாங்க வேண்டும். பின்னர், காலி மதுபாட்டில்களை டாஸ்மாக் கடைகளில் திரும்ப ஒப்படைத்து, 10 ரூபாயை பெற்றுக்கொள்ள வேண்டும். இந்த புதிய நடைமுறை ஜூன் 15ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டு உள்ளது.
கொல்லிமலையில் இயங்கி வரும் மூன்று மதுபானக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபான பாட்டில்களுக்கு மட்டுமே இந்த நடைமுறை பொருந்தும். உரிய ஒத்துழைப்பு வழங்கும்படி வாடிக்கையாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தெரிவித்துள்ளார்.