கடன் தொல்லையால் மகனைக் கழுத்தை நெறித்துக் கொன்றுவிட்டு, பெற்றோரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தஞ்சையில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை அடுத்துள்ள மேலவெளி மனோ நகரைச் சேர்ந்தவர் ராஜா. இவர் ரியல் எஸ்டேட் அதிபராக இருந்தார். அதோடு தஞ்சை பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட மூன்று இடங்களில் சொந்தமாக டீக்கடையும் நடத்திவந்தார். இவரது மனைவி கனகதுர்கா. இவர்களுக்கு ஸ்ரீவர்ஷன் என்கிற பதினோரு வயது மகன், தனியார் பள்ளி ஒன்றில் 6ஆம் வகுப்பு படித்துவந்தார்.
இந்நிலையில், தொழில் சம்பந்தமாக கடந்த சில ஆண்டுகளாக அதிகளவில் கடன் வாங்கியிருக்கிறார். வட்டிமேல் வட்டியோடு, கொடுத்தவர்கள் அதிக நெருக்கடி கொடுத்ததால் ராஜா மனமுடைந்து, தனது குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்துள்ளார். இதனிடையே நேற்றிரவு (05.12.2021) கனகதுர்கா, தனது தம்பிக்கு ‘நாங்கள் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ளப்போகிறோம்’ என குறுஞ்செய்தி அனுப்பிவிட்டுத் தற்கொலை செய்துகொண்டனர்.
காலையில் தனது அக்கா அனுப்பிய தகவலைப் பார்த்த தம்பி அதிர்ச்சியடைந்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது, மகன் படுக்கையில் உயிரிழந்த நிலையிலும், ராஜாவும், கனகதுர்காவும் தூக்கில் தொங்கிய நிலையிலும் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியில் உடைந்துபோனார். பிறகு கள்ளபெரம்பூர் காவல்துறையினருக்குத் தகவல் கூறினர். அங்கு வந்த காவல்துறையினர், மூவரின் உடலையும் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ராஜா கடன் சுமை காரணமாக தற்கொலை செய்துகொண்டாரா, அல்லது வேறு எதுவும் காரணமா என்பது குறித்து போலீசார் விசாரனை நடத்திவருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தஞ்சையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.