Three children passed away mother hospitalized

திருவண்ணாமலை மாவட்டம், சதாகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் கட்டட வேலை செய்யும் கூலித்தொழிலாளி பரசுராமன். இவரது மனைவி அமுதா. இந்தத்தம்பதிக்கு 5 வயதான நிலவரசு, 4 வயதான குறலரசு, 3 வயதான யாஷினி என மூன்று குழந்தைகள் உள்ளனர்.

Advertisment

பரசுராமனுக்கும் அவரது மனைவி அமுதாவிற்கும் அடிக்கடி குடும்பத்தகராறு இருந்து வந்துள்ளது. சண்டை அதிகமாகும்போது அமுதா தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு தாய் வீட்டுக்கு சென்றுவிடுவார். உறவினர்கள், குடும்பத்தினர் சமாதானத்துக்குப் பின்னர் கணவர் வீட்டுக்கு வந்து மீண்டும் கணவருடன் வாழ்வார்.

Advertisment

ஆகஸ்ட் 3ம் தேதி இரவு கணவன் மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. கணவன் மனைவி இருவரும் பேசிக்கொள்ளாமலே இருந்துள்ளனர்.

இந்நிலையில் ஆகஸ்ட் 5ம் தேதி மதியம் சதாகுப்பம் கிராமம் வழியாக செல்லும் தென்பெண்ணையாற்றில் இரண்டு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தையை தாய் அமுதா, வீசியதால் அவர்கள் தண்ணீர் குடித்து அழுதபடி இறந்துள்ளனர்.

இறுதியில் அமுதாவும் தற்கொலை செய்துக்கொள்ள ஆற்றில் குதித்துள்ளார். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அமுதாவை ஆற்றில் இருந்து மீட்டனர். தற்கொலைக்கு முயன்றஅமுதாவை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அமுதாவிற்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

நீரில் மூழ்கிய குழந்தைகளை பலரும் ஆற்றில் குதித்து தேடினர். வெகுநேர தேடலுக்கு பிறகு மூன்று குழந்தைகளும் சடலமாக மீட்கப்பட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வாணாபுரம் காவல்துறையினர் சடலங்களை உடற்கூறு ஆய்விற்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

குடும்பத் தகராறு காரணமாக, பெற்ற பிள்ளைகளை தாயே ஆற்றில் வீசி கொலை செய்ததும், அவரும் தற்கொலைக்கு முயன்ற சம்பவமும் சுற்றுவட்டார கிராமங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து வாணாபுரம் காவல் நிலைய அதிகாரிகள், வருவாய்த்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.