விழுப்புரம் மாவட்டம் ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் லாசர், இவரின் மனைவி ப்ளோரி. இவர்கள் இருவரும் கடந்த 28-ம் தேதி இரவு விழுப்புரம் பஸ் நிலையத்திலிருந்து தங்கள் குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு தங்களுக்குச் சொந்தமான இருசக்கர வாகனத்தில் காணை என்ற கிராமத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். அப்போது சோழகங்கம் என்ற பகுதியில் அவர்கள் வாகனத்தில் செல்லும்போது இரண்டு இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் வழிமறித்து லாசர் தம்பதியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி அவர்களிடமிருந்து இரண்டரை பவுன் நகையைப் பறித்துச் சென்றனர்.
இது குறித்து அந்தத் தம்பதிகள் காணை போலீசாரிடம் புகார் அளிக்க, அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் ஏற்கனவே ஒரு வழிப்பறியில் திருடுபோன மொபைல் போன் எண்ணை வைத்து ஆய்வு செய்தனர். அதில் திருவண்ணாமலையைச் சேர்ந்த ஒரு கும்பல் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்தது. அதன் அடிப்படையில் திருவண்ணாமலை சோமாசிபாடி பகுதியில் தங்கியிருந்த போரூர் ராக்கி, சிவசக்தி நகர் அருணாச்சலம், ஊத்துக்கோட்டை கலையரசன், பாய்ச்சல் பகுதியைச் சேர்ந்த வீரமணி ஆகிய நால்வரையும் கைது செய்தனர்.
அவர்களிடம் விசாரணை நடத்திய போலீசார் தொடர்ந்து வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. அவர்களிடமிருந்து இரண்டு கத்தி ஒரு இருசக்கர வாகனம், ஏழு செல்போன்கள், இரண்டரை சவரன் நகை ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர். இவர்கள் ஒரே நாளில் விழுப்புரம் காணை, திருவண்ணாமலை, செஞ்சி , உட்பட 11 இடங்களில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.
மேலும் இவர்கள் திருவண்ணாமலை மாவட்டத்தில் கொலை முயற்சி, அடிதடி உட்பட 10க்கும் மேற்பட்ட வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் என்பதும் கடந்த 20 நாட்களுக்கு முன்பு கொலை வழக்கில் சிறைக்குச் சென்று வெளியே வந்த சிவா என்பவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. தொடர் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் விழுப்புரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.