திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், கார்த்திகை தீபத் திருவிழா, நவம்பர் 20 ஆம் தேதி காலை, 6 மணிக்குக் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதை முன்னிட்டு விழா ஏற்பாடுகள், பக்தர்களுக்குச் செய்ய வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து, அனைத்துத் துறை அதிகாரிகளுடன் கலெக்டர் சந்தீப் நந்துாரி நவம்பர் 19 ஆம் தேதி மாலை ஆய்வு நடத்தினார். ஆய்வுக் கூட்டத்துக்குப் பின்னர் கலெக்டர் நிருபர்களிடம் பேசும்போது,
கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றம் நவம்பர் 20 ஆம் தேதி அதிகாலை, 5:30 மணி முதல் 7:30 மணிக்குள் நடக்கிறது. டிசம்பர் 3 ஆம் தேதி வரை 13 நாட்கள் தீபத் திருவிழா நடைபெறும். விழாவிற்கு வரும் பக்தர்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்படும். வரும் நவம்பர் 26 ஆம் தேதி, பஞ்ச மூர்த்திகள் தேரோட்டம் ஆகம விதிப்படி கோவில் வளாகத்திற்குள் நடக்கும்.
விழா நாட்களில் ஆன்லைன் மூலம் 5,000 பேர், ஆன்லைனில் பதிவு செய்யாத பக்தர்கள் முன்னுரிமை அடிப்படையில், 3,000 பேர் என நாள் ஒன்றுக்கு 8,000 பேர், காலை, 6:30 மணியிலிருந்து மாலை, 6:30 மணி வரை, ஆறு கட்டங்களாக பக்தர்கள் சமூக இடைவெளியுடன் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவர்.
தீபத் திருவிழாவிற்குச் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படாது. வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகள் மட்டும் இயக்கப்படும். வரும் நவம்பர் 28 மற்றும் மகா தீபம் நடக்கும் 29 ஆகிய தேதிகளில் வெளியூர் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் திருவண்ணாமலை நகருக்குள் வரத் தடை விதிக்கப்படுகிறது. திருவண்ணாமலை நகரத்தைச் சேர்ந்தவர்கள் வரத் தடை இல்லை, அவர்கள் குடியிருப்பிற்கான அடையாள ஆவணங்களை செக்போஸ்டில் காண்பிக்க வேண்டும். மேலும், 28, மற்றும் 29 ஆகிய தேதிகளில் கிரிவலம் செல்வதற்குத் தடை விதிக்கப்படுகிறது.
29 -ஆம் தேதி, மகா தீபத்தன்று கோவில் வளாகத்தில், கோவில் பணியாளர்கள், பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவோர், பத்திரிகையாளர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவர். பக்தர்களுக்கு அனுமதியில்லை, அன்னதானம் வழங்கத் தடை விதிக்கப்படுகிறது. கோவில் நிர்வாகம் சார்பில், கோவிலுக்குள் வரும் பக்தர்களுக்கு மட்டும் பார்சல் மூலம் உணவு வழங்கப்படும் என்றார்.