திருவண்ணாமலை ரமண ஆசிரமம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் இப்போதும் பல வெளிநாட்டினர் தங்கியுள்ளனர். அதோடு, தனியார் விடுதிகளிலும் தங்கியுள்ளனர். அமெரிக்காவைச் சேர்ந்த 68 வயதான பெண்மணி, 'கெஸ்ட் ஹவுஸ்' என்கிற விடுதி ஒன்றில் தங்கியிருந்துள்ளார்.
இந்தப் பெண்மணியை 108 ஆம்புலன்ஸ் மூலமாக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், டிசம்பர் 4ஆம் தேதி இரவு அனுமதித்துள்ளனர். மயக்கத்தில் இருந்த அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார் என்பதை தெரிந்து காவல்துறைக்குத் தகவல் கூறியுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து போலீஸார் நடத்திய விசாரணையில், அப்பெண் போதைப் பொருள் உட்கொண்டுள்ளார். அவர் போதையில் இருந்தபோது 4 பேர் சேர்ந்து வன்கொடுமை செய்துள்ளார்கள் எனத் தெரியவருகிறது. அவர்கள் யார் என விசாரணை நடத்திவருகிறோம். அவர் கண் விழித்தால்தான் என்ன நடந்தது என்பது தெரியவரும் என்கிறார்கள்.
போதைப் பொருட்கள் புழக்கம் திருவண்ணாமலை நகரில் அதிகமாகியுள்ளது. திருவண்ணாமலையில் தங்கியுள்ள வெளிநாட்டினர் சிலரும் அதனைப் பயன்படுத்துவதாகத் தெரிகிறது. அவர்கள் உள்ளுர் போதைப் பொருள் விற்பனை நபர்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு போதைப் பொருட்களை வாங்குவதாகக் கூறப்படுகிறது. சில நேரங்களில் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து போதைப் பொருள் எடுத்துக்கொள்வதாக ஏற்கனவே குற்றச்சாட்டு உள்ளது.
அப்படி, இருக்கும்போது பாலியல் பிரச்சனைகளும் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. திருவண்ணாமலை நகரில் தங்கியுள்ள வெளிநாட்டினரிடம் கடந்த சில வருடங்களில், போதைக்கு அடிமையான உள்ளூர் இளைஞர்கள் பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.