![Thiruvallur district A Father of Mental illness boy has been caught by police](http://image.nakkheeran.in/cdn/farfuture/W10-CHJvHnmVYz9gho6WD_-SttCHU5ZyDrG8Dwl3Dng/1621076290/sites/default/files/inline-images/th-1_1100.jpg)
தமிழகம் உட்பட இந்தியாவின் பல மாநிலங்களில் கரோனாவின் இரண்டாம் அலை அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தமிழக அரசு அதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் காரணமாக வரும் 24ம் தேதி வரை தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களுக்கான கடைகள் முதலில் காலை 12 மணி வரை திறக்கப்பட்டது. இந்த ஊரடங்கு காலத்தில் சென்னை காவல் ஆணையர் ஊரடங்கில் இருக்கும் காவலர்கள் பொதுமக்களிடம் கனிவாக நடந்துகொள்ள வேண்டும், வாகனங்களை பறிமுதல் செய்யக்கூடாது என்று தெரிவித்திருந்தார். இந்த ஊரடங்கின் போது பொதுமக்கள் அதிக அளவில் வெளியே சுற்றி திரிவதால் ஊரடங்கின் பயன் அடைய முடியாத நிலை ஏற்படுமோ எனும் அச்சம் ஏற்பட்டது.
இதனால், ஊரடங்கில் இன்னும் பல கட்டுப்பாடுகளை அறிவித்து ஊரடங்கை கடுமையாக்கியுள்ளது தமிழக அரசு. அதன்படி இன்று (15ஆம் தேதி) முதல், அத்தியாவசிய பொருட்களின் கடைகள் காலை 10 மணி வரை மட்டுமே இயங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 17ம் தேதி முதல் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பதிவு முறை உள்ளிட்டவை அவசியம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து நேற்று முதல் சென்னை உட்பட தமிழகத்தில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று காலை திருவள்ளூர் மாவட்டத்தில், மன நலம் பாதிக்கப்பட்ட தனது குழந்தைக்கு மருந்து வாங்கச் சென்றவரை காவல்துறையினர் மடக்கி அவரிடம் ஊரடங்கு விதியை மீறியதாக அபராதம் விதித்து அனுப்பியுள்ளனர். இதனால், மனமுடைந்த அவர், தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழக அரசை குறிப்பிட்டு, எந்த ஆட்சி வந்தாலும் போலீஸ் குணம் மாறாது. வேலை வெட்டி இல்லாத இந்தநாளில் குடும்பம் நடத்துவது எவ்ளோ கஷ்டம். மனநலம் பாதிக்கப்பட்ட பையனுக்கு மருந்து வாங்க ₹.500 ரோட அலைஞ்சிகிட்டு இருந்தா இவங்க அதையும் பிடிங்கிட்டு அனுபுராங்க. பையன் சாகட்டும் என்று விட்டுவிட்டேன்” என்று பதிவிட்டு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
@CMOTamilnadu எந்த ஆட்சி வந்தாலும் போலீஸ் குணம் மாறாது. வேலை வெட்டி இல்லாத இந்தநாளுல குடும்பம் நடத்துவது எவ்ளோ கஷ்டம். மனநலம் பாதிக்கப்பட்ட பையனுக்கு மருந்து வாங்க ₹.500 ரோட அலைஞ்சிகிட்டு இருந்தா இவங்க அதையும் பிடிங்கிட்டு அனுபுராங்க. பையன் சாகட்டும் என்று விட்டுவிட்டேன். pic.twitter.com/72VDNxjtPN
— balaji (@rybalaji) May 14, 2021
இது தமிழக முதல்வர் அலுவலகத்தின் கவனத்திற்கு சென்றுள்ளது. அதனைத் தொடர்ந்து, தலைமைச் செயலகத்திலிருந்து அதிகாரிகள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் என பலர் அவரை தொடர்புகொண்டு நடந்தவற்றை விசாரித்தனர். மேலும் காவல்துறை அதிகாரிகள் நான்கு மணி நேரத்திற்குள் அவரின் வீடு தேடி வந்து மருந்தையும் தாங்கள் பெற்ற பணத்தையும் திருப்பிக் கொடுத்துவிட்டு தங்களின் வருத்தத்தையும் தெரிவித்துவிட்டு சென்றனர்.
முதல்வரின் இந்த செயலுக்கு நன்றி தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர், “இன்று காலை காவல்துறை மீது என் ஆதங்கத்தை வெளிப்படுத்தினேன். என் குறைகளை கேட்டறிந்தது பேராறுதலாக இருந்தது. பின்னர் அதிகாரிகள் பேரன்போடு என்னை அணுகினர். நான்குமணி நேரத்தில் என் மகனின் மருந்தையும் பணத்தையும் வீடு தேடிவந்து கொடுத்துதவிய காவல்துறைக்கும் அரசுக்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அமைந்ததிலிருந்தே தமிழகத்தில் பல்வேறு வகையில் நாகரிக அரசியல் நடந்துவருவதாக அரசியல் விமர்சகர்களும் மக்களும் தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில் இந்த சம்பவம் மீண்டும் திமுக ஆட்சி பலரின் பாராட்டையும் பெற்றுவருகிறது.