குற்றங்கள் மற்றும் திருட்டுகளில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுப்பதும் அவர்களைக் காவல்துறையினர் அழைத்துச் சென்று விசாரணை செய்வதும் இயல்பான ஒன்று. அந்த வகையில், கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் திருட்டுகளில் ஈடுபட்ட ஒருவர் காவல்துறையினரைக் கண்டதும் சாக்கடை உள்ளே சென்று பதுங்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சி அருகே சூளேஸ்வரன்பட்டியைச் சேர்ந்தவர் ஹக்கீம் (36). இவர் மீது கோவை கிழக்கு மற்றும் மேற்கு காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், நேற்று முன்தினம் (05.10.2021) மேற்கு காவல் நிலைய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
அப்போது நள்ளிரவு நேரத்தில் ராஜா மில் ரோட்டில் ஹக்கிம் சுற்றிக்கொண்டிருந்தார். ரோந்து பணியில் இருந்த காவலர்கள் அவரை பிடித்து எதற்காக இந்த இடத்தில் சுற்றிக்கொண்டிருக்கிறாய்? என விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதனைக் கண்டு பயந்த ஹக்கீம் அங்கிருந்து தப்பித்து சுமார் 50 அடி தூரம் சாக்கடை கால்வாய்க்குள் பதுங்கியுள்ளார். சாக்கடைக்குள் நீச்சலடித்து சென்ற ஹக்கீமை ஒலிபெருக்கி மூலம் எச்சரித்து வெளியே வருமாறு அழைத்துள்ளனர். ஆனால் ஹக்கீம் காவலர்களுக்குப் பயந்து சாக்கடைக்குள் பதுங்கிக்கொண்டு வெளியே வரவில்லை.
பின்னர் ஹக்கீமை பிடிப்பதற்கு காவல்துறையினர் தீயணைப்பு குழுவினரின் உதவியை நாடியுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், சாக்கைடையின் மேல் மூடப்பட்டிருந்த கான்கீரிட் மூடியை இயந்திரங்களின் உதவியுடன் துளையிட்டு அகற்றினர். சுமார் இரண்டு மணி நேரம் போராடி கான்கீரிட் மூடியை உடைத்த தீயணைப்பு துறையினர், ஹக்கீமை பிடித்து வெளியே கொண்டுவந்துள்ளனர். இதையடுத்து ஹக்கீமை கைது செய்த காவல்துறையினர், அவரிடம் நடத்திய விசாரணையில் செல்ஃபோன் திருடியது தெரியவந்துள்ளது.