தமிழக அரசு மீது குறை சொல்ல முடியாத சிலர், மதவெறியை தூண்டி அரசியல் செய்கிறார்கள் என்று பா.ஜ.க.வை மறைமுகமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாடியுள்ளார்.
சேலம் மாவட்டம், ஆத்தூரில், தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம், செவ்வாய்க்கிழமை (மே 24) நடந்தது. தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.
தி.மு.க. முதன்மைச் செயலாளரும், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமை வகித்தார். அமைச்சர்கள் துரைமுருகன், சிவசங்கர், சேலம் மத்திய மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், மேற்கு மாவட்ட செயலாளர் டி.எம்.செல்வகணபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, "கடந்த சட்டமன்றத் தேர்தலில், சேலம் மாவட்டமானது திமுகவுக்கு எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. ஆனாலும், தொடர்ந்து நடந்த உள்ளாட்சித் தேர்தலில் மாபெரும் வெற்றியை இந்த மாவட்டத்தில் பெற்றிருக்கிறோம்.100 சதவீத வெற்றியை அடுத்தடுத்து வரும் தேர்தலிலும் பெறப்போகிறோம் என்ற நம்பிக்கையை, இந்த கூட்டத்தைப் பார்க்கும் போது உணர முடிகிறது.
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான், முதலமைச்சராகப் பொறுப்பேற்ற நேரத்தில் எனக்கு ஒருவிதமான பயம் இருந்தது. என்ன காரணம் என்றால், கடந்த பத்தாண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில், தமிழகம் அனைத்து துறைகளிலும் பாதாளத்திற்கு போயிருந்தது. அதை ஓராண்டு காலத்தில் சீர் செய்ய முடியுமா? என யோசித்துக் கொண்டிருந்தேன். தமிழ்நாட்டின் நிதிநிலை மிக மிக கவலைக்கிடமாக இருந்தது. 6 லட்சம் கோடி ரூபாய் கடனில் தமிழகம் தத்தளித்துக் கொண்டிருந்தது.
இதுதான் என் மனதில் கடந்த ஆண்டு மே மாதம் இருந்த தயக்கங்கள். ஆனால், இன்று தமிழ்நாட்டை தலை நிமிரச் செய்திருக்கிறோம். அதை நான் தலை நிமிர்ந்து சொல்கிறேன். வீழ்ந்து கிடந்த தமிழ்நாடு இன்று எழுச்சி பெற்றிருக்கிறது. முடங்கிக் கிடந்த தமிழ்நாடு இன்று புத்தெழுச்சி பெற்றிருக்கிறது.
நிதி நெருக்கடியில் இருந்து தமிழ்நாடு மீண்டு வந்து கொண்டிருக்கிறது. இந்த ஓராண்டு காலம் என்பது மிகப்பெரிய நம்பிக்கையை எனக்கு கொடுத்திருக்கிறது. தலைச்சிறந்த மாநிலமாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கையை உருவாக்கி இருக்கிறது. இந்தியாவின் சிறந்த மாநிலமாக மட்டுமல்ல; அனைத்து வளங்களும் கொண்ட மாநிலமாக விரைவில் மாற்ற முடியும் என்ற நம்பிக்கையை கொடுத்திருக்கிறது.
மாலையிலே ஆத்தூருக்கு வருவதற்கு முன்பு மேட்டூருக்குச் சென்று அணையைத் திறந்து விட்டுதான் இங்கு வந்திருக்கிறேன். வழக்கமாக ஜூன் 12- ஆம் தேதிதான் அணை திறக்கப்படும். கடந்த ஆண்டு ஜூன் 12- ஆம் தேதி, நானே வந்து அணையை திறந்து வைத்தேன். அணை திறப்பின் மூலம் திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 5.21 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.
மேட்டூர் அணை, சேலம் மாவட்டத்தில் இருந்தாலும் சுற்றியுள்ள 12 மாவட்ட மக்களுக்கும், நிலப்பரப்புக்கும் ஒளி விளக்காக மேட்டூர்தான் அமைந்திருக்கிறது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் மிகச்சரியாக ஜூன் 12- ஆம் தேதி மேட்டூர் திறக்கப்பட்டதா? என்றால் இல்லை. 2020- ஆம் ஆண்டில் மட்டும்தான் ஜூன் 12- ல் அணையைத் திறந்தார்கள். அதற்கு முந்தைய ஆண்டுகளில், செப். 17, ஆக. 2, ஆக. 10, செப். 20, அக். 2, ஜூலை 19, ஆக. 13 என 2012ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும், உழவர்களைப் பற்றி எந்த கவலையுமின்றி தங்கள் விருப்பப்படிதான் தண்ணீரைத் திறந்து விட்டுள்ளனர்.
ஆனால் தி.மு.க. ஆட்சி அமைந்த கடந்த ஆண்டே கூட சரியாக ஜூன் 12- ல் அணையைத் திறந்தோம். இந்த ஆண்டும் ஜூன் 12- ஆம் தேதிதான் அணையை திறக்க திட்டமிட்டு இருந்தோம். ஆனால் இயற்கையே இந்த ஆட்சிக்கு மாபெரும் ஆதரவைக் கொடுக்கும் அடையாளமாகத்தான் மழை கொட்டுகிறது.
தண்ணீர் வரத்து அதிகரித்த காரணத்தால் முன்கூட்டியே இன்றே மேட்டூரில் தண்ணீரை திறந்து விட்டிருக்கிறோம். நாடு விடுதலை அடைந்ததில் இருந்தே குறுவை சாகுபடிக்காக வழக்கமாக திறக்கப்படும் நாளுக்கு முன்னால், மே மாதத்தில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுவது இதுதான் முதல்முறை. தேர்தல் வாக்குறுதியில் நாம் கொடுக்காத வாக்குறுதி இது. ஆக, மக்கள் மட்டுமின்றி இயற்கையும் நம் பக்கம் இருக்கிறது என்பதற்கு இதுதான் அடையாளம்.
ஆட்சிக்கு வந்தபிறகு நாம் செய்யத் தொடங்கிய முதல் பணி, பாசன கால்வாய்களை தூர் வாரியதுதான். கால்வாய்களை விரைவாக தூர் வாரியதால் கடைமடை வரை தண்ணீர் பாய்ந்தது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதமே தூர்வாரும் பணிகள் தொடங்கிவிட்டது. 80 கோடி ரூபாயில் இந்தப் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. இதனால் கடைமடை வரை தண்ணீர் பாயப் போகிறது.
கடந்த ஆண்டு உழவர்களுக்கு 61 கோடி ரூபாய் மதிப்பில் குறுவை சாகுபடி தொகுப்பு வழங்கப்பட்டது. இதனால் வரலாற்றில் முதன்முதலாக நெல் சாகுபடி பரப்பு அதிகமானது. 4.90 லட்சம் ஏக்கர் நெல் சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளது. இதனால் 1.15 கோடி டன் உணவு உற்பத்தி நடந்துள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளில் இதுதான் அதிகபட்ச உணவு உற்பத்தி.
தமிழ்நாட்டில் நல்லாட்சி மலர்ந்ததன் அடையாளமாகத்தான் மண் செழிப்பு, விளைச்சல் அதிகமாகி இருக்கிறது. இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பணவீக்கம் அதிகரித்து இருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் மட்டும்தான் பணவீக்கம் குறைந்து இருக்கிறது. இதை தமிழ்நாடு அரசு சொல்லவில்லை. ஒன்றிய அரசின் நிறுவனம்தான் இந்த புள்ளி விவரங்களை சொல்லி இருக்கிறது.
பணவீக்கம் குறைய நம்முடைய அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு சமூக நலத்திட்டங்கள்தான் காரணம். மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணம், பெண்களுடைய வாழ்வில் மிகப்பெரிய வளர்ச்சியை இந்த திட்டம் உருவாக்கி இருக்கிறது. மாத சம்பளம், தினக்கூலி வாங்கக் கூடிய பெண்களுக்கு 600 முதல் 2500 ரூபாய் வரை மாதம்தோறும் செலவு மிச்சமாகிறது.
மக்களைத் தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு, பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் வீதம் ஓராண்டுக்கு முன்பே குறைத்தோம். கரோனா காலத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 4,000 ரூபாய் கொடுத்தோம். மளிகை பொருள்களை வழங்கினோம். நெருக்கடியான நேரத்திலே கோடிக்கணக்கான மக்களுக்கு அது ஆறுதலை அளித்தது.
ஒரு லட்சம் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு வழங்கினோம். 5 பவுனுக்குக் கீழ் நகைக்கடன் பெற்ற 13 லட்சம் பேருக்கு கூட்டுறவு கடன் தள்ளுபடி செய்தோம். மகளிர் சுய உதவிக்குழுவிற்கு 2,000 கோடி ரூபாய் கடன் உதவி திட்டங்களை செயல்படுத்தினோம். தேர்தலுக்கு முன்னால் மக்களை சந்தித்தபோது, லட்சக்கணக்கில் மக்கள் மனு கொடுத்தனர். அதை ஒரு பெட்டியில் போட்டு பூட்டி வைத்தேன். ஆட்சிக்கு வந்த பிறகு திறந்தேன். அதில் இருந்த 2.50 லட்சம் மனுக்களுக்கு 100 நாள்களில் தீர்வு கண்டவன்தான் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.
அதையடுத்து, 100 நாள்களில் உங்கள் கோரிக்கைகளை பரிசீலித்து செய்து தரக்கூடிய காரியங்களை செய்வேன் என்று சொன்னேன். சொன்னதைப் போலவே செய்தேன். இப்போது அதே போல உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம் 234 தொகுதியில் விரிவுபடுத்தினோம். தேர்தல் முடிந்த பிறகு, எனக்கு 234 தொகுதிகளும் சொந்த தொகுதிகளைப் போல எண்ணிதான் செயல்பட்டு வருகிறேன். அதனால்தான், இன்றைக்கு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கூட பாராட்டக்கூடிய வகையில் தி.மு.க. ஆட்சி பீடு நடை போட்டு வருகிறது.
மிகுந்த நல்லெண்ணத்தோடு ஒரு நல்லாட்சியை மக்களாகிய நீங்கள் உருவாக்கினீர்கள். உங்கள் நம்பிக்கை வீண் போகவில்லை. இவ்வளவு நன்மைகள் நடக்க நீங்கள்தான் காரணம். அதை நிறைவேற்றக்கூடிய கருவிதான் நான். தி.மு.க. வளர்ந்து விட்டது என்பது இந்தியாவுக்கே தெரிந்து விட்டது. இங்கிருந்து போன தொழிற்சாலைகள், பல்வேறு நிறுவனங்கள் மீண்டும் தொழில் தொடங்க தமிழ்நாட்டிற்கு வருகிறது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சி வளர்ந்து விட்டது என்று உலகத்திற்கே தெரிந்து விட்டது. அதனால்தான் வெளிநாட்டு நிறுவனங்களும் தொழில் தொடங்க இங்கு வருகின்றனர்.
இப்படி உலகம் உணர்ந்ததை, தமிழ்நாட்டில் உள்ள சிலரால் உணர முடியவில்லை. அவர்களுக்காக நான் வேதனைப்படுகிறேன். பரிதாபப்படுகிறேன். வெட்கப்படுகிறேன். இந்த ஆட்சி மீது நியாயமான குறை சொல்ல முடியாத சிலர், ஆன்மீகத்தின் பெயரால் குறை சொல்ல தொடங்கி இருக்கிறார்கள். எவரது பக்திக்கும், எவரது உணர்வுக்கும் திமுக அரசு தடையாக இருந்ததும் இல்லை. இனியும் இருக்காது. பக்தி பிரச்சாரம் ஒரு பக்கம் நடக்கட்டும். அதேபோல பகுத்தறிவு பிரச்சாரம் ஒருபக்கம் தொடரட்டும் என்பதுதான் கலைஞர் நமக்கு காட்டியிருக்கும் பாதை.
ஆட்சி என்பது அனைவருக்கும் பொதுவானது. எல்லா துறையும் வளர வேண்டும் என்றுதான் சொல்லி வருகிறேன். 2,500 கோடி ரூபாய் திருக்கோயில் சொத்துகள் திமுக ஆட்சியில் மீட்கப்பட்டுள்ளது. திருக்கோயில்களின் ஆவணங்கள் அனைத்தும் இணையத்தில் பதிவேற்றம் செய்திருக்கிறோம். கோயில்களில் பணியாற்றும் அனைவருக்கும் 4,000 ரூபாய் பணம், அரிசி கொடுத்திருக்கிறோம். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டம் இந்த ஆட்சியில்தான் கொண்டு வரப்பட்டுள்ளது. அன்னை தமிழில் வழிபாடு நடத்த உத்தரவிட்டுள்ளோம்.
ஒரு கால பூசை திட்டத்தின் கீழ் 30,000 அர்ச்சகர்களுக்கு மாதம் 1,000 ரூபாய், தலைமுடி திருத்தும் தொழிலாளர்களுக்கு 5,000 ரூபாய் வழங்கி இருக்கிறோம். ஒருகால பூசை செய்யக்கூடிய கோயில்களுக்கு வழங்கப்பட்டு வரும் மானியத்தை ஒரு லட்சம் ரூபாயில் இருந்து 2 லட்சம் ரூபாயாக உயர்த்தி, 12959 கோயில்களுக்கு மானியம் வழங்கப்பட்டு உள்ளது.
அறநிலையத்துறை சார்பில் 10 கலைக்கல்லூரிகள் உருவாக்கப்படும். கோயில் மண்டபங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச திருமணம் செய்து கொள்ளும் திட்டம் கொண்டு வந்துள்ளோம். திருக்கோயில் நிரந்தர பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டு உள்ளது. பொங்கல் கருணைத்தொகை தரப்பட்டுள்ளது. ஆலய அலுவலக கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டு உள்ளது. 81 கோயில்களுக்கு குடமுழுக்கு செய்யப்பட்டு உள்ளது. எனது தலைமையில் ஆலோசனைக் குழுவும் அமைக்கப்பட்டு உள்ளது. இவை அனைத்தும் இந்து சமய அறநிலையத்துறையில் கடந்த ஓராண்டில் செய்த சாதனைகள்.
உண்மையான ஆன்மீகவாதிகள் என்றால் இதையெல்லாம் நீங்கள் ஆதரித்திருக்க வேண்டும். அதற்கு நேர்மாறாக மதத்தை வைத்து, மதவெறியைத் தூண்டி அரசியல் செய்யும் நிலையில் இருப்பவர்கள், இதை திசை திருப்புகின்றனர்.
பொய்யான அவதூறுகளை சொல்லி ஆட்சி மீது அவதூறுகளை பரப்புகின்றனர். இந்த அவதூறுகளை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. வாழ்க வசவாளர்கள் என்று அண்ணா சொன்னபடி, நான் என் இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறேன். யாருக்கும் பதில் சொல்லி பதில் என்னுடைய நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. நாட்டு மக்களுக்கு நன்மை செய்யவே எனக்கு நேரம் போதவில்லை." இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.