பிரதமர் மோடி, சில தினங்களுக்கு முன்பு 'மன் கி பாத்' என்ற வானொலி நிகழ்ச்சி மூலம் மக்களுக்கு ஒரு கோரிக்கை வைத்தார். அந்த நிகழ்ச்சியில் "கரோனாவுக்கு எதிரான நமது நாட்டு மக்களின் போராட்டம் இன்னும் தொடர்கிறது. இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடையும் அற்புதமான, வரலாற்றுத் தருணத்தைக் காணப்போகிறோம். வரும் ஆகஸ்ட் 13- ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15- ஆம் தேதி வரை நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும்" எனக் கோரிக்கை வைத்திருந்தார்.
பிரதமரின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து தமிழகத்தில் பாஜக சார்பில் இதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், ''வரும் 13 ஆம் தேதி கலையிலிருந்து 15 ஆம் தேதி வரை மூன்று நாட்கள் ஒவ்வொரு வீடுகளிலும் நமது தேசிய கோடியை ஏற்ற வேண்டும். அதனைத் தகுந்த மரியாதையுடன் போற்ற வேண்டும் என்பது மிகவும் முக்கியமானது. கொடியை ஏற்றிவிட்டு அதனை கலாச்சாரத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஒரு இணையதளத்தில் பதிவிட வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக பல்வேறு ஏற்பாடுகளை பாஜக செய்து வருகிறது. சுமார் 50 லட்சம் வீடுகளில் கொடி ஏற்ற ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது. கொடியேற்ற சில திருத்தங்களை மத்திய அரசு கொண்டு வந்திருக்கிறது. கதர் துணியில் மட்டுமே தேசியக் கொடியைத் தயாரிக்க வேண்டும் என்கிற நிலையை மாற்றி எம்மாதிரியான துணியிலும் பாலிஸ்டர், பட்டு ஆகியவற்றிலும் கொடியைத் தயாரிக்கலாம். தேசியக் கொடி விற்பனைக்கு வரிவிதிப்பு இல்லை. மாலை 6 மணிக்குத் தேசியக் கொடியை இறக்கிவிட வேண்டும் என்பதற்குப் பதிலாகத் தகுந்த மரியாதையுடன் எல்லா இடத்திலும் இரவும் கொடியைப் பறக்க விடலாம் ஆனால் கொடியை அவமானப்படுத்தக்கூடாது. எனவே இதனை ஒரு திருவிழா போலக் கொண்டாட வேண்டும்'' என்றார்.