தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படும்போது எழுந்து நிற்க வேண்டிய விதி இல்லை என்று உயர் நீதிமன்ற கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற விழா ஒன்றில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் இசைக்கப்பட்டபோது காஞ்சி மட இளைய பீடாதிபதி விஜயேந்திரர் எழுந்து நிற்காதது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதே நேரம், தேசிய கீதம் இசைக்கப்படும்போது எழுந்து நின்று மரியாதை செய்ததையும் சுட்டிக்காட்டிய நாம் தமிழர் கட்சியினர் விஜயேந்திரின் இந்த செயலைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக ராமேஸ்வரம் காஞ்சி மட மேலாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில், போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தங்கள் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி நாம் தமிழர் கட்சியினர் சார்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், “தமிழ்த்தாய் வாழ்த்து இறைவணக்க பாடல்;அது தேசிய கீத பாடல் அல்ல. எனவே தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும்போது எழுந்து நிற்க வேண்டும் என்ற விதி இல்லை. தமிழ் மீதுகொண்ட அதீதப்பற்று மற்றும் மரியாதை காரணமாகவே எழுந்து நிற்கிறோம்” என தெரிவித்து ராமேஸ்வரம் காவல்துறையினர் பதிவுசெய்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.