இன்று நெல்லையின் பாளை ரஹ்மத் நகரில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் நடந்த பெருஞ்சித்திரனாரின் 27 வது நினைவு நாளில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மலர் தூவி மரியாதை செலுத்தினார். கட்சியின் நினைவு ஜோதியையும் ஏற்றிவைத்தார்.
பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், ''நாட்டின் இறையாண்மை குறித்து பேசிவிட்டு நாட்டைத் துண்டாடும் செயலை ஆர்.எஸ்.எஸ். செய்கிறது. நாட்டின் குடிகள் மீது வெறுப்பை வைத்துக் கொண்டு இறையாண்மை குறித்துப் பேசுகிறார். சர்வதேச அரங்கில் இந்தியாவின் கடன் 90 லட்சம் கோடி அதிகரித்துள்ளது. ஏழாயிரம் கோடி ரூபாயை இந்தியா இலங்கைக்கு கொடுப்பதால் என்ன பயன். இலங்கையின் சிங்களவர்கள் இந்தியாவிற்கு விசுவாசமாக இருப்பார்களா?. சீனாவின் ஒரு மாகாணமாக இலங்கை மாறி விட்டது. இலங்கையின் வணிக நிறுவனங்களின் பெயர் பலகையில் கூட சீன எழுத்துக்கள். 18 ஆண்டுகள் தொடர்ச்சியாக மத்திய அமைச்சரவையில் இருந்த தி.மு.க.விற்கு கச்சத்தீவை மீட்க நேரம் கிடைக்கவில்லை. சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் என்பது எதற்கு? அரசின் செயல்கள் மக்களைச் சென்றடையும் போது சாதனை விளக்க பொதுக் கூட்டம் தேவையற்றது.
ஓராண்டு திமுக. ஆட்சியின் ஊழலைக் கேட்கும் அண்ணாமலைக்கு அ.தி.மு.க.வின் 10 ஆண்டு கால ஊழலைக் கேட்கவில்லை. 2024ல் நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் அவர்களுடன் கூட்டணி வைக்காமல் இருப்பார்களா?. பா.ஜ.க. ஆளுகிற 20 மாநிலங்களில் ஊழல் நடை பெறாமல் இருக்கிறதா?. நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடும். இஸ்லாமியர் கிறிஸ்துவர் வாக்குகள் நமக்கு கிடைக்காமல் பார்த்துக் கொள்கிறார்கள். நமக்கு கிடைத்தால் நம் வாக்கு வங்கி 7 லிருந்து 10 சதமாக உயரும்'' என்றார்.