
சென்னை மேற்கு மாம்பலத்தில் நடைபெற்ற தேமுதிக செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், ''234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் உள்ளனர். கூட்டணி தர்மத்திற்காகப் பொறுமையாகக் காத்திருக்கிறோம். பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. தனித்து நின்றாலும் 10 முதல் 15 சதவிகிதம் வரை வாக்கு வங்கி உள்ளது'' என்றார்.
மேலும், ''தேமுதிகவைக் கண்டு அஞ்சுகிறார்கள். வெட்ட வெட்ட வளர்ந்துகொண்டே இருப்போம்'' எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தேமுதிக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ''இந்த நிமிடம் வரைக்கும் அதிமுக கூட்டணியில்தான் இருக்கிறோம். ஆனால் கூட்டணி பேச்சுவார்த்தை காலதாமதம் செய்வதால் எங்களுக்கு எந்தப் பலனும் இல்லை. இன்னும் இரண்டு மாதத்தில் தேர்தல் வர இருக்கிற நிலையில், காலதாமதம் பண்ணாமல் தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் உடனடியாக பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும்'' எனக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.