தேனி வட்டார போக்குவரத்து (ஆர்.டி.ஓ) அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூபாய் 5,500 பறிமுதல் செய்யப்பட்டது.
தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டியில் வட்டார போக்குவரத்து அலுவலகம் (ஆர்.டி.ஓ) மற்றும் சோதனைச்சாவடி செயல்பட்டு வருகிறது. இதற்கு முன்பு குமுளியில் இயங்கி வந்த இந்த அலுவலகம் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இங்கு மாற்றப்பட்டது. கேரளாவுக்கு செல்லும் வாகனங்கள் இங்கு அனுமதி வாங்கிய பிறகுதான் சோதனைச்சாவடியில் அனுமதி வழங்கப்படும்.
சபரிமலை செல்லும் பக்தர்கள் இங்கு அனுமதிச் சீட்டு வாங்கிச் செல்கின்றனர். தற்போது இ- பாஸ் நடைமுறை அமலில் இருப்பதால் வெளியூர் வாகனங்களும் அனுமதி பெறுவதற்கு இங்கு வந்து செல்கின்றனர். இதனால் நாள் தோறும் ஆயிரக்கணக்கானோர் இந்த அலுவலகத்திற்கு வருகின்றன. இந்த நிலையில் இந்த அலுவலகத்தில் லஞ்சம் வாங்குவதாக வந்த புகாரின் பேரில் மதுரை மாவட்ட லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. சத்தியசீலன் தலைமையில் இன்ஸ்பெக்டர் கீதா மற்றும் 8 பேர் கொண்ட போலீஸ் படையினர் காலையில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது கணக்கில் வராத 5500 ரூபாய் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பணத்தை லஞ்ச ஒழிப்புத்துறையினர் பறிமுதல் செய்தனர். காலையிலிருந்து 27 வாகனங்கள் அனுமதிச் சீட்டு பெற்றிருந்த நிலையில் அவர்களிடம் இருந்து இந்த தொகை பெற்றது விசாரணையில் தெரியவந்தது. மேலும், முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றிய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.