அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் இன்று (23/06/2022) சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் திடீரென கூட்டத்தில் இருந்து பாதியிலேயே கிளம்பிச் சென்று விட்டார். அவர் செல்லும் போது எடப்பாடி ஆதரவாளர்கள் சிலர் தண்ணீர் பாட்டிலையும் தூக்கி வீசினார்கள். அதுமட்டுமல்லாமல், அவருடைய வாகனத்தைப் பஞ்சர் ஆக்கிய சிலர், அவரைத் தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் தமிழகம் முழுவதும் உள்ள ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் பெரும் அதிர்ச்சியில் மூழ்கியதுடன் மட்டுமல்லாமல், எடப்பாடி பழனிசாமியைக் கண்டித்து ஆங்காங்கே கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், ஓ.பி.எஸ் சொந்த மாவட்டமான தேனி மாவட்டத்தில் உள்ள பெரிய குளம், போடி, தேனி ஆகிய பகுதிகளில் உள்ள ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் எடப்பாடி பழனிசாமியைக் கண்டித்துக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதுபோல் கடமலைக்குண்டு, உத்தமபாளையத்தில் உள்ள ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் எடப்பாடி பழனிசாமியைக் கண்டித்துக் கண்டன குரல் எழுப்பியதுடன் மட்டுமல்லாமல், அவருடைய உருவ பொம்மையையும் தீ வைத்து எரித்து தனது கண்டனத்தை வெளிப்படுத்தினர். இப்படி மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள், எடப்பாடிக்கு எதிராகக் கண்டன குரல் கொடுத்து வருவது தேனி மாவட்ட அ.தி.மு.க.வில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.