கோவை கோவில்பாளையம் அத்திபாளையத்தை அடுத்துள்ள சென்ராயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜன் (60). இவரது மனைவி மல்லிகா இறந்துவிட்ட நிலையில் தனியாக அரசு தொகுப்பு வீட்டில் வசித்துவந்தார். இவர் தவில் இசை கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது காலில் அதிகமான கொப்பளங்களால் அவதிப்பட்டு இருந்தார். நேற்றிரவு தனியாக வீட்டில் உறங்கச் சென்ற அவர், காலிலுள்ள புண்ணால் அதிக வலி எடுத்ததால் தன்னை பார்த்துக்கொள்ள யாரும் இல்லை என்ற மன விரக்தியில் வீட்டிலிருந்த மின் விசிறியில் வேட்டியால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இன்று காலை வீட்டிற்கு அருகில் உள்ள கார்த்தி என்பவர் அவரது வீட்டிற்கு சென்றபோது ராஜன் தூக்கில் தொங்குவதை கண்டு அக்கம் பக்கத்தினர் உதவியுடன் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனே விரைந்துவந்த கோவில்பாளையம் காவல்துறையினர் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.