Skip to main content

இருப்பது இரண்டு வாரங்கள்... தேவையோ ரூ. 4 கோடி... குழந்தையின் உயிர்காக்க பெற்றோரின் பாசப்போராட்டம்...

Published on 21/10/2021 | Edited on 21/10/2021

 

thanjavur couple raising funds to save save their daughter bharathi from Spinal muscular atrophy

 

முதுகு தண்டுவட தசை நார் சிதைவு (SMA) நோயால் பாதிக்கப்பட்டுள்ள தங்களது 23 மாத பச்சிளம் குழந்தையின் உயிரைக் காக்கப் போராடி வருகின்றனர் தஞ்சாவூரைச் சேர்ந்த ஜெகதீஷ், எழிலரசி தம்பதியினர். 

 

தஞ்சாவூர், நாஞ்சிக்கோட்டை சாலை சீராஜ்பூர் நகரைச் சேர்ந்த ஜெகதீஷ், எழிலரசி ஆகியோரின் மகள் பாரதி. பிறந்து இரண்டு ஆண்டுகள் கூட ஆகாத இப்பச்சிளம் குழந்தையின் உயிரை மெல்லக் குடித்து வருகிறது SMA எனும் கொடிய நோய். 

 

பேசுவது, நடப்பது, மூச்சு விடுவது மற்றும் விழுங்குதல் போன்ற அடிப்படை மனித இயக்கங்களை, மூளை மற்றும் முதுகெலும்பு பகுதிகளில் அமைந்திருக்கும்  நரம்பு செல்களே கட்டுப்படுத்துகின்றன. இந்த நரம்பு செல்களின் செயல்பாடுகளைப் பாதித்து மனிதனின் அடிப்படை இயக்கங்களையே மேற்கொள்ள முடியாமல் செய்து, உயிரிழப்பு வரை கொண்டுவிட்டுவிடக் கூடியது இந்த நோய். 

 

இப்படிப்பட்ட இந்த கொடிய நோயினால் பாதிக்கப்பட்டுள்ள தங்களது குழந்தையைக் காப்பாற்ற பண உதவிக்காகப் பொதுமக்களை நாடியுள்ளனர் ஜெகதீஷ், எழிலரசி தம்பதியினர். பிறந்தபோது ஆரோக்கியமாகக் காணப்பட்ட இவர்களது குழந்தை பாரதி, இரண்டு வயதை நெருங்கும்போது தானாக எழுந்து நிற்க முடியாமல் இருந்துள்ளது. இதனையடுத்து குழந்தைக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டதில், முதுகு தண்டுவட தசை நார் சிதைவு நோயால் குழந்தை பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. 'ZOLGENSMA', என்ற ஊசி மருந்து செலுத்தினால் மட்டுமே இந்நோயின் பிடியிலிருந்து சிறுமியைக் காக்க முடியும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆனால், இந்த ஒற்றை மருந்தின் விலை 16 கோடி ரூபாய் என அறிந்து, அதிர்ச்சியடைந்த குழந்தை பாரதியின் பெற்றோர், சிகிச்சைக்குத் தேவையான போதிய பணத்தைத் திரட்ட முடியாமல் கடைசி நம்பிக்கையாகப் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். 

 

06.11.2021 அன்று தனது இரண்டாவது பிறந்தநாளைக் கொண்டாடவேண்டிய குழந்தை பாரதிக்கு, அதற்குள்ளாக அந்த ஊசியைச் செலுத்த வேண்டும் என்றார் நம்முடன் பேசிய குழந்தையின் தாய் எழிலரசி. மேலும், "சிறுதுளி பெருவெள்ளம் என்ற உதவியவர்களால் இதுவரை (20.10.2021) 12 கோடி கிடைத்துள்ளது. மீதமுள்ள 4 கோடியை அடைய நீங்களும் உங்களின் நண்பர்களும் சிறு உதவி செய்தால் கூட ( 4 லட்சம் பேர் x 100 ரூபாய்) அவளின் இரண்டாவது பிறந்தநாள் 06.11.2021க்குள் இந்த ஊசியைச் செலுத்தி அவளின் உயிரைக் காப்பாற்றி விடலாம்" எனக் கூறி மக்கள் மீதான நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள் குழந்தையின் பெற்றோர் ஜெகதீஷ் மற்றும் எழிலரசி.

 

பெற்றோரின் தொடர்பு எண்கள்...
ஜெகதீஷ் - 9791793435
எழிலரசி - 9597584987

நேரடியாக பண உதவி செய்ய வங்கி கணக்கு விவரம்..
R. Jagadeesh
Account No. 1147155000168550
IFSC. KVBL0001147
Bank. Karur vysya bank

G pay, phone pe & paytm 9791793435

 

 

சார்ந்த செய்திகள்