பத்திரிக்கை மற்றும் ஊடகங்களில் பணிபுரியும் நிருபர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்படும் என்ற திட்டத்தை முன்னாள் முதல்வர் கலைஞர் கொண்டுவந்தார். அதன் அடிப்படையில், முதன்முதலில் மதுரையில் உள்ள பத்திரிக்கையாளர்களுக்கு மாட்டுத்தாவணி அருகிலையே இடம் ஒதுக்கி வீட்டுமனை பட்டாவையும் வழங்கினார். அதைத் தொடர்ந்து திமுக ஆட்சியில் பல மாவட்டங்களில் உள்ள பத்திரிக்கையாளர்களுக்கு தலா 3 சென்ட் வீதம் வீட்டுமனை வழங்கப்பட்டது.
அதன் பின் முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, ஒபிஎஸ் ஆகியோர், விடுபட்டுபோன வீட்டுமனை பட்டா கேட்டு பல மாவட்டங்களில் உள்ள பத்திரிக்கையாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தியும் கொடுக்க ஆர்வம் காட்டவில்லை. தற்பொழுது சட்டமன்றத் தேர்தல் வருவதையொட்டி முதல்வர் எடப்பாடி தமிழக மக்களுக்கு பல்வேறு சலுகைகளையும் திட்டங்களையும் அறிவித்திருக்கிறார். அதுபோல், பத்திரிகையாளர்களுக்கும் வீட்டுமனை பட்டா வழங்கப்படும் என்று கூறினார். அதைத் தொடர்ந்து சேலம் உட்பட ஒரு சில மாவட்டங்களில் உள்ள பத்திரிக்கையாளர்களுக்கு வீட்டுமனை பட்டா கொடுக்கப்பட்டும் இருக்கிறது.
தேனி மாவட்டத்தில் உள்ள பத்திரிக்கையாளர்கள் கடந்த 20 வருடங்களாக வீட்டுமனை பட்டா கேட்டு தொடர்ந்து போராடி வந்தனர். ஆனால், அமைச்சராகவும், துணை முதல்வராகவும் இருந்துவரும் ஓ.பி.எஸ். தனது மாவட்டத்தில் உள்ள பத்திரிக்கையாளர்களுக்கு வீட்டுமனை பட்டா வாங்கி கொடுக்க ஆர்வம் காட்டாமல் இருந்து வந்தார். அதைக் கண்டித்து பத்திரிக்கையாளர்கள் போராட்டத்தில் குதிக்கத் தயாராகிவந்தனர். இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேனி வீரபாண்டி அருகே புல எண் 1591-ன் படி, 0.83.0 ஹெக்டர் பஞ்சமி நிலத்தை நத்தமாக மாற்றி 53 பத்திரிகையாளர்களுக்கு (அதுவும் தலா இரண்டரை செண்ட் இடம்) முதல் கட்டமாக வீட்டுமனை பட்டா கொடுக்க அரசு ஆணை (எண் 638) கடந்த 12.11. 2020 தேதி தேதி போடப்பட்டது. ஆனால், அந்த அரசாணையில் இந்த இடம் ஆக்கிரமிப்பில் இருப்பதால் அதனுடைய இரண்டு வழக்குகள் (வழக்கு எண் 18882/2019-- (2525/2021) மதுரை ஐகோர்ட்டில் நடந்து வருகிறது. அந்த வழக்கு தீர்ப்பு வரும்வரை பயனாளிகள் யாரும் அந்த இடத்தில் உள்ளே நுழையக் கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இப்படி பிரச்சனைக்குரிய இடத்திற்கான அரசு ஆணையைத்தான், வீட்டுமனை பட்டா எனக்கூறி தேர்வு செய்யப்பட்ட 53 பத்திரிக்கையாளர்களை அழைத்து கடந்த 18ஆம் தேதி ஓ.பி.எஸ். கொடுத்திருக்கிறாரே தவிர, வீட்டுமனை பட்டா ஒன்றும் கொடுக்கவில்லை. இப்படி கோர்ட்டில் வழக்கில் உள்ள அந்த இடத்திற்கு தீர்வு காணாமல் அரசு ஆணையை மட்டும் ஓ.பி.எஸ். கொடுத்ததை கண்டு பத்திரிக்கையாளர்களும் ஒருபுறம் மனம் நொந்துபோய் இருக்கின்றனர். இந்த நிலையில்தான் தேனி மாவட்ட திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் திடீரென பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து பேசும்போது, “பத்திரிக்கையாளர்களுக்கு அ.தி.மு.க அரசு வீடு கட்ட இடம் கொடுத்ததாக கேள்விபட்டேன். ஏன் இவ்வளவு அவசரமாக கொடுத்தார்கள் என பார்க்கும்போது, இன்னும் இரண்டு மாசத்தில் தி.மு.க ஆட்சிக்கு வரப்போது.
அவங்கதான் பத்திரிக்கையாளர்களுக்கு இடம் கொடுக்கப்போறாங்க என்ற செய்தி ஓ.பி.எஸ் காதுக்குப் போயிருக்கிறது. அதனால்தான், அவசர அவசரமாக இடம் கொடுத்திருக்காங்க. நம்ம மாவட்டத்தில் உள்ள 53 பத்திரிக்கையாளர்களுக்கு இடம் குடுத்திருக்காங்க. அதை நான் குறை சொல்லவில்லை. இதில் என்ன தவறு என்றால், அந்த இடத்திற்காக இரண்டு பேர் வழக்கு போட்டு, அந்த வழக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் நிலுவையில் இருக்கு. அப்படி வழக்கில் உள்ள ஒரு இடத்தைப் பத்திரிக்கையாளர்களுக்கு கொடுக்கலாமா? சாதாரணமா மக்களுக்கு கொடுத்தாக்கூட அது தவறுதான்.
ஜனநாயகத்தின் நான்காம் தூணாக இருக்கும் பத்திரிக்கையாளர்களுக்கு கொடுக்கலாமா? பிரச்சனைக்குரிய அந்த இடம் வழக்கில் இருக்கும்போது முதலில் அரசு ஆணை போட்டது தவறு. வழக்கை முடித்துவிட்டு அரசு, ஆணை போட்டுப் பத்திரிகையாளர்களுக்கு வீட்டுமனை பட்டாவாக வழங்கியிருக்க வேண்டும். அதுதான் விதிமுறையும் கூட. அதை விட்டுவிட்டு வழக்கில் இருப்பதை அரசு ஆணை போட்டு பத்திரிக்கையாளர்களுக்கு கொடுத்திருக்கும் அ.தி.மு.க அரசின் மூடத்தனமான இந்தச் செயல்பாட்டை நான் வன்மையாக கண்டிக்கிறேன். அதுவும் துணை முதல்வராக இருக்கும் ஓ.பி.எஸ். இப்படி செய்திருப்பது, பத்திரிக்கையாளர்களை ஏமாற்றியிருக்கிறார் என்றுதான் அர்த்தம். அதனால் தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் நல்ல இடத்தைத் தேர்வு செய்து தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து பத்திரிக்கையாளர்களுக்கும் வீட்டுமனை பட்டா கொடுப்பதுடன் மட்டுமல்லாமல் அந்த இடத்தில் வீடு கட்டியும் கொடுக்கப்படும்” என்று கூறினார்.