கார்த்தி சிதம்பரம் மீது ஏற்கனவே ஐஎன்எக்ஸ் மீடியா, ஏர்டெல் மேக்சிஸ் வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் 2010 முதல் 2014 ஆம் ஆண்டு வரை சீனர்கள் இந்தியா வருவதற்கு சட்டவிரோதமாக 260 விசாக்கள் கார்த்திக் சிதம்பரம் நிறுவனத்தின் மூலம் தரப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இதற்காக பணம் பெறப்பட்டதாகவும் புகார் எழுந்துள்ளது. 50 லட்சம் பெற்றுக்கொண்டு விசா வழங்கியதாக கார்த்தி சிதம்பரத்தின் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. மேலும் சென்னை, மும்பையில் தலா மூன்று இடங்களிலும், கர்நாடக, பஞ்சாப், ஒடிசாவில் தலா ஒரு இடமும் என மொத்தம் 9 இடங்களில் 5 மணிநேரத்திற்கு மேலாக சோதனை நீடித்து வருகிறது.
இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வப்பெருந்தகை, ''புகாரின் அடிப்படையில் அழைக்கலாம், விசாரிக்கலாம். அவர்கள் இன்வெஸ்டிகேஷன் செய்ய எல்லா அதிகாரமும் இருக்கிறது. வீட்டில் பெண்கள், வயதானவர்கள் இருக்கும்பொழுது தொடர்ந்து நான் சிபிஐயை ஏவ விடுவேன், ஏஜென்சியை ஏவ விடுவேன் என்றால் இதென்னமுறை. இன்று நாட்டில் உள்ள பொருளாதாரம் பற்றியும், நாட்டு நடப்பு பற்றியும் சிதம்பரம் தெளிவாக சொல்லிக் கொண்டிருக்கிறார். அவர் பேசுவதை தடுப்பதற்காக, அவரது குரல்வளையை நெறிப்பதற்காகவே இந்த சோதனை நடைபெற்று வருகிறது'' என்றார்.