கரோனா தொற்றால் அறிவிக்கப்பட்ட லாக்டவுனால் பொதுமக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். நடமாட்டம் போக்குவரத்துகள் முன்போலில்லை. இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு போதைச்சரக்குகள் கூட சர்வ சாதாரணமாக நுழைந்து விடுகின்றன.
ஒருங்கிணைந்த குற்றங்களின் தடுப்பு பிரிவின் போதைத்தடுப்பு யூனிட்டிற்கு கிடைத்த தகவலால் அதன் ஆய்வாளர் செந்தூர் குமார் தலைமையிலான போலீசார் தென்காசி மாவட்டம், சுரண்டை அருகிலுள்ள பரங்குன்றாபுரத்திலிருக்கும் தனியார் குடோன் ஒன்றை முற்றுகையிட்டுச் சோதனை நடத்தியுள்ளனர். அங்கே பதுக்கி வைக்கப்பட்ட புகையிலை மற்றும் குட்கா சிக்கியிருக்கிறது. விசாரணையில் இதுதொடர்பாக பரங்குன்றாபுரத்தின் ராஜன், மருதுபுரத்தை சேர்ந்த ஞானகுமார் இருவரைக் கைது செய்து, விசாரணை மேற்கொண்டிருக்கிறார்கள்.
தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்காவை வெளிமாநிலங்களிலிருந்து பிக் அப் வேன் மூலம் வரவழைத்து தொடர்ந்து விற்பனை செய்து வந்தது தெரிய வந்திருக்கிறது. பிடிபட்ட தடைச் சரக்கின் மதிப்பு 17 லட்சத்து 42 ஆயிரம் என்கிறார்கள் ஓ.சி.ஐ.யூ.வின் யூனிட்டை சேர்ந்தவர்கள்.