திருச்சி காந்தி மார்க்கெட் தஞ்சாவூர் சாலையில் உள்ளது செல்லாயி அம்மன் திருக்கோவில். இந்த கோவிலை நிர்வாகம் செய்யும் தனசேகரன் கடந்த 2 நாட்களுக்கு முன்பாக கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது உள்ளே நுழைந்த 4 இளைஞர்கள் ஏதோ பல ஆண்டுகளாக திருட்டு தொழிலில் ஈடுபட்டு வருவது போல் பல பில்டப்களை காட்டிக்கொண்டு கோவில் வளாகத்தில் உள்ள உண்டியலை உடைத்து அதில் இருந்த 350 ரூபாயை கொள்ளை அடித்து சென்றனர்.
மேலும் உள்ளே நுழைந்தவுடன் சுற்றி யாரும் வருகிறார்களா? நிதானமாக பொறுமையாக திருட வேண்டும் என்று அவர்களுக்குள் பேசிக் கொள்வது நகைச்சுவையை ஏற்படுத்துவதாக இருந்தது. இந்நிலையில் கோவிலுக்குள் உண்டியலில் வைக்கப்பட்டிருந்த பணம் திருடு போனதாக தனசேகரன் திருச்சி காந்தி மார்க்கெட் காவல் நிலைய போலீசாரிடம் புகார் கொடுத்தார்.
அதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவலர்கள் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து விசாரணை செய்தனர். அப்போது, திருச்சி செங்குளம் காலனியைச் சேர்ந்த சிறுவன்(16), அதே பகுதியை சேர்ந்த பரத்குமார், மகேந்திரன், ஜெயசீலன் உள்ளிட்ட இளைஞர்கள் இதனை மேற்கொண்டுள்ளனர் என்பது தெரியவந்தது. 16 வயது மட்டுமே பூர்த்தியான சிறுவனை சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்திற்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். மற்ற மூன்று இளைஞர்களையும் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.