கரோனா தடுப்பூசியைச் செலுத்த விரும்பாத ஆசிரியர்கள் பொதுநலன் கருதி வீட்டிலேயே இருந்து விடுங்கள் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அறம் அறக்கட்டளையின் தலைவரான ஏ.உமர்பாரூ சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், "கல்வி நிறுவனங்களில் உள்ள பணியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்களுக்கு கரோனா தடுப்பூசியை கட்டாயமாக்கக் கூடாது" என உத்தரவிடக் கோரியிருந்தார்.
இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் இன்று (22/11/2021) விசாரணைக்கு வந்தது. அப்போது, மாணவர்களின் நலன் கருதி ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்துவது கட்டாயம் எனத் தெரிவித்த நீதிபதிகள், சொந்த காரணங்களுக்காகத் தடுப்பூசியைச் செலுத்த விருப்பப்படாத ஆசிரியர்கள் பொதுநலன் கருதி வீட்டிலேயே இருப்பது தான் சிறந்தது. மாணவர்களின் நலன் கருதியே அரசு இந்த உத்தரவு பிறப்பித்துள்ளது என்று குறிப்பிட்டனர். மேலும், பொதுநலனுக்கு எதிரான மனு என்றும் சுட்டிக்காட்டினர்.
இதையடுத்து, மனுவை வாபஸ் பெறுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதால், வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.