‘மொய் விருந்து’... இந்த வார்த்தையைக் கேட்டாலே இது புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்ட மக்களின் பிரத்யேக வார்த்தையாக தெரியும். ஆம்.. தஞ்சை மாவட்டம் பேராவூரணிப் பகுதியில் 1980 காலக்கட்டத்தில் தொடங்கிய மொய் விருந்து, பிறகு படிப்படியாக புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம், கொத்தமங்கலம், வடகாடு, மாங்காடு, அணவயல் என சுற்றியுள்ள 100 கிராமங்களில் கலாச்சார விருந்தாக நடத்தப்பட்டு வருகிறது.
இந்த மொய் விருந்துகளால் குழந்தைகளைப் படிக்க வைத்த குடும்பங்களும், விவசாயம், தொழிலை விரிவுபடுத்திய குடும்பங்களும் ஏராளம் என்றாலும் வீழ்ந்த குடும்பங்களும் உண்டு. இந்நிலையில், கஜா புயல் தொடங்கி கரோனா வரை கடந்த 3 வருடங்களாக இந்த மொய் விருந்து விழாக்களும் பொய்த்துக்கொண்டிருக்கிறது. கஜா புயல் டெல்டா மக்களைப் புரட்டிப் போட்டபோது, அமெரிக்கா வாழ் தமிழர்கள் மொய் விருந்து நடத்தி நிதி திரட்டி தமிழக மக்களுக்கு நிவாரணம் வழங்கினார்கள்.
பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கவும் மொய் விருந்து நடத்தினார்கள். இதுபோன்ற நல்ல விஷயத்திற்காக, ஒருவர் கறி விருந்து கொடுக்காமல், தனது கடையில் தேனீர் கொடுத்து மொய் விருந்து நடத்த அழைப்பிதழ் கொடுத்து அழைத்திருக்கிறார். அந்த அழைப்பிதழில், “டெல்லி போன்ற பகுதிகளில் கரோனா பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ 5.5.2021 அன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடக்கும் மொய் விருந்தில் கலந்துகொண்டு, நான் கொடுக்கும் தேனீரை அருந்தி தாராளமாக மொய் செய்ய வேண்டுகிறேன். இப்படிக்கு பகவான் டீக்கடை வம்பன்.”
இந்த அழைப்பிதழை தனது வாடிக்கையாளர்களுக்கு நேரிலும் சமூக வலைதளங்கள் மூலமும் கொடுத்துவிட்டு மொய் வாங்க தயாராக இருக்கிறார் தேநீர்க் கடை இளைஞர் சிவக்குமார். இதே இளைஞர், கஜா புயலில் மக்கள் பாதிக்கப்பட்டிருந்தபோது தனது கடை வாடிக்கையாளர்கள் வைத்திருந்த கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்தார். கடந்த ஆண்டு கரோனா ஊரடங்கு நேரத்தில் காய்கறி, அரிசி என நலிவுற்றவர்களுக்கு நிவாரணம் வழங்கினார். தற்போது மொய் விருந்து நடத்த அழைத்திருக்கிறார்.
இதுகுறித்து பகவான் டீக்கடை சிவக்குமார் நம்மிடம் பேசும்போது, “கஜா புயல், கரோனா என கடந்த 3 வருடமாக மக்கள் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல டெல்லி போன்ற வடமாநிலங்களில் ரொம்பவே பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவி செய்ய நினைக்கிறேன். ஆனால் எனக்கு வசதி இல்லை. ஒவ்வொரு நாளும் டீக்கடையில் கிடைக்கும் ரூ.300, 400தான் வருமானம். ஆனாலும் நிதி திரட்ட தட்டமிட்டு, இந்தப் பகுதியில் பிரபலமான மொய் விருந்து நடத்தலாம் என்ற முடிவில் அழைப்பிதழ் அச்சடித்து கொடுத்திருக்கிறேன்.
புதன்கிழமை காலை மொய் சட்டி வைத்துவிடுவேன். வரும் வாடிக்கையாளர்கள் டீயைக் குடித்துவிட்டு அவர்களால் முடிந்த பணத்தை நோட்டில் எழுதிவிட்டு சட்டியில் போடுவார்கள். மாலை எண்ணி அதை கரோனா நிவாரண நிதியாக கொடுக்க இருக்கிறேன்” என்றார். மேலும், “மொய் விருந்து பத்திரிக்கை என்றால் விருந்துண்டு மொய் செய்து என்றுதான் போடுவோம். ஆனால் என்னால் கறி விருந்து நடத்த முடியாது என்பதால் தேனீர் விருந்து நடத்துகிறேன்” என்றார். இளைஞர் சிவக்குமாரின் இந்தச் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.