பெட்ரோல், டீசலுக்கான கூடுதல் வரிகளை அடிப்படை கலால் வரியுடன் சேர்ப்பதன் மூலமே மாநில அரசுகளுக்கு நியாயமான நிதி பங்கீடு கிடைக்கும் என்றும், அதுவரை அவற்றின் மீதான வரியை மாநில அரசுகள் குறைக்க முடியாது என்றும் தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
பெட்ரோல், டீசலுக்கான வரியை மத்திய அரசுக் குறைத்த போதும், தமிழகம் உள்ளிட்ட சில மாநில அரசுகள் தங்கள் பங்குக்கு வரியைக் குறைக்கவில்லை என பிரதமர் நரேந்திர மோடி குறை கூறியிருந்தார். இதற்கு தமிழக நிதியமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
பெட்ரோல், டீசலுக்கான அடிப்படை கலால் வரியைக் குறைத்தபோதும், கூடுதல் வரிகளைத் தொடர்ந்து அதிகரித்து வந்ததால், மாநில அரசுகளுக்கு கிடைக்கும் வருவாயின் பங்கு குறைந்த நிலையில், மத்திய அரசின் வருவாய் பல மடங்கு உயர்ந்திருப்பதாக புள்ளி விவரங்களுடன் தமிழக நிதியமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அடிப்படை கலால் வரி வருவாய் மட்டுமே மாநில அரசுகளோடு பகிரப்படுவதாகவும், கூடுதல் வரிகள் மூலம் கிடைக்கும் வருவாயை மத்திய அரசே வைத்துக் கொள்வதாகவும் அமைச்சர் விளக்கியுள்ளார். எனவே, அடிப்படை வரிகளோடு கூடுதல் வரிகளை இணைத்து, 2014- ஆம் ஆண்டுக்கு முன்பு இருந்த நிலை வந்தால் மட்டுமே தமிழகத்தில் வரிக்குறைப்பு சாத்தியம் என்றும் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.