Skip to main content

"கரோனா பரவலை அதிகரிக்க வழிவகுக்கும்"-ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை!

Published on 12/06/2021 | Edited on 12/06/2021

 

TASMAC SHOPS REOPENING ADMK CHIEF OPANNEERSELVAM STATEMENT

 

அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் தமிழக முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று (12/06/2021) வெளியிட்டுள்ள அறிக்கையில், கரோனா நோய்த்தொற்றுப் பரவலை மேலும் கட்டுப்படுத்தும் நோக்கில், தமிழகத்தில் ஊரடங்கு சில தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்படுவதாக ஒருபுறம் அறிவிப்பு வெளியிடப்பட்டாலும், 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும் என்ற அறிவிப்பு கரோனா நோய்த்தொற்றுப் பரவலை அதிகரிக்க வழிவகுக்கும். இந்த அறிவிப்பினைப் பார்க்கும் போது, சமயத்திற்கு தகுந்தாற்போல் ஒரு நிலைப்பாட்டினை தி.மு.க. எடுக்கிறதோ என்ற எண்ணம் அனைவரின் மத்தியிலும் மேலோங்கி நிற்கிறது. 

 

2020- ஆம் ஆண்டு மே மாதம் முதல் வாரத்தில் தமிழகத்தில் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சராசரியாக 3,000 என்றிருந்த நிலையில், உயிரிழப்புகள் சராசரியாக 30 என்றிருந்த நிலையில், சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்டப் பகுதிகள் தவிர மற்றப் பகுதிகளில் 07/05/2020 முதல் மதுபானக் கடைகள் திறக்கப்படும் என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு அறிவித்த போது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. சார்பில் அவரவர் வீடு முன்பு கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், தற்போதைய முதலமைச்சரும் தன் வீட்டின் முன் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினார்.

 

இதனைத் தொடர்ந்து, ஆகஸ்ட் மாதம் தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,000- க்கும் குறைவாகவும், உயிரிழப்புகள் சராசரியாக தினசரி 100 முதல் 120 என்றிருந்த போது, சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் திறக்கப்படாமல் இருந்த மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் 18/08/2020 முதல் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர், இது கரோனா பரவலை மேலும் அதிகரிக்க வழிவகுக்கும் என்றும், மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை திறக்கக்கூடாது என்றும் கூறியிருந்தார். 

 

தற்போது, தி.மு.க. ஆட்சி தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் தான் இப்போது, தமிழகத்தின் முதலமைச்சர், 11/06/2021 அன்றைய நிலவரப்படி கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,759 என்றிருந்த சூழ்நிலையில், உயிரிழப்புகளின் எண்ணிக்கை 378 என்றிருந்த சூழ்நிலையில், 27 மாவட்டங்களில் 'டாஸ்மாக்' கடைகள் காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும் என்ற அறிவிப்பினை தமிழக முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். அதாவது, சென்ற ஆண்டை ஒப்பிடுகையில், மூன்று மடங்கிற்கும் மேலாக பாதிக்கப்பட்டவர்கள் இருக்கின்ற சூழ்நிலையில், மூன்று மடங்கிற்கும் மேலாக உயிரிழப்போரின் எண்ணிக்கை இருக்கின்ற சூழ்நிலையில் 'டாஸ்மாக்' கடைகள் செயல்பட அனுமதிக்கப்படும் என்ற முடிவு முறைதானா என்று முதலமைச்சர் சிந்தித்துப் பார்க்க வேண்டும். 

 

அரசு வருவாயை விட மனித உயிர் மிக முக்கியமானது என்பதன் அடிப்படையில், 14/06/2021 முதல் டாஸ்மாக் கடைகள் செயல்பட அனுமதிக்கப்படும் என்ற முடிவினைத் திரும்பப் பெறுமாறு தமிழக முதலமைச்சரைக் கேட்டுக் கொள்கிறேன்." இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

சார்ந்த செய்திகள்