நாகையில் டாஸ்மாக் ஊழியர்களிடம் மாத மாமூல் வசூல் செய்து வைத்திருந்த மாவட்ட மேலாளரிடம் மூன்று லட்சம் ரூபாய் லஞ்சப் பணத்தைப் பறிமுதல் செய்துள்ளனர் லஞ்ச ஒழிப்புத்துறையினர்.
நாகை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் உள்ள டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கே மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நாகை மாவட்டத்தில் செயல்பட்டுவரும் 45 டாஸ்மாக் கடைகளின் மேற்பார்வையாளர்களிடம் இருந்து டாஸ்மாக் மாவட்ட மேலாளர் மாத மாதம் மாமூல் வசூல் செய்வது வழக்கம்.
இந்த நிலையில், நாகை நீதிமன்ற வளாகத்திற்குள் அமைந்துள்ள ஓய்வூதியர் சங்க கட்டிடத்தில் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அம்பிகாபதி தலைமையில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வந்த அனைத்து டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர்களும் மேலாளருக்கு வழக்கமாக வழங்கக்கூடிய லஞ்சப் பணத்தைக் கொண்டுவந்து வரிசையாகக் கொடுக்க வந்துள்ளனர். அப்போது, இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு ரகசியமாகத் தகவல் கிடைக்க, அதிரடியாகக் கூட்டத்திற்குள்ளே நுழைந்த லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. மனோகரன் தலைமையிலான போலீஸார், மேலாளர் அம்பிகாபதியிடம் இருந்து கணக்கில் வராத மூன்று லட்சத்து ஐந்தாயிரம் ரூபாய் லஞ்சப் பணத்தைப் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, மேலாளர் மற்றும் அதிகாரிகளிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகையில் மாமூல் பணத்தை வசூல் செய்யத் தனியாகக் கூட்டம் நடத்தி வசூல் வேட்டை நடத்திய டாஸ்மாக் மேலாளர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் கையும் கலவுமாகப் பிடிபட்டது நாகை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.