தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றுவருகிறது. இன்றைய கூட்டத்தின்போது, இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் எனப்படும் சி.ஏ.ஏ. சட்டத்தை ரத்து செய்யக் கோரி பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனி தீர்மானத்தைக் கொண்டுவந்தார்.
இதனை மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி வரவேற்றுள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, “தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின், ஒன்றிய அரசின் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு (சி.ஏ.ஏ.) எதிராக தீர்மானத்தை முன்மொழிந்து அதை சட்டசபையில் நிறைவேற்றியிருக்கிறார். அவரது துணிச்சலான இந்த முடிவைப் பாராட்டி மனிதநேய ஜனநாயக கட்சி வரவேற்கிறது.
கடந்த தேர்தலுக்கு முன்பாக நாங்கள் அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்தபோது, நாங்கள் கையளித்த ஐந்து அம்ச கோரிக்கைகளில் இது முதன்மையானது. அந்த வகையில் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம். இன்றைய சி.ஏ.ஏ.வுக்கு எதிரான தீர்மானத்தில் முதல்வர் எடுத்துரைத்துள்ள கருத்துகள் ஒன்றிய அரசு கவனத்தில் கொள்ள வேண்டிய அறிவுரைகளாகும்.
ஈழத் தமிழர்களையும், அண்டை நாட்டு முஸ்லிம்களையும், நேபாள கிறிஸ்தவர்களையும் புறக்கணித்து, மத பாகுபாடு மூலம் இந்தியாவின் பாரம்பரிய கண்ணியத்தை சீர்குலைக்கும் இச்சட்டத்திற்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் தமிழக மக்களின் உணர்வுகளை எதிரொலிப்பதாக இருக்கிறது. இத்தீர்மானம் என்பது இச்சட்டத்திற்கு எதிராக இரவு, பகலாக போராடிய மக்களுக்கு கிடைத்த வெற்றியாகும்.
இதற்காக போராடிய அரசியல் கட்சிகள், ஜனநாயக இயக்கங்கள், சமூக செயல்பாட்டாளர்கள், மனித உரிமை போராளிகள் அனைவரும் அகமகிழ்ந்துள்ளனர். எனவே எமது மனமார்ந்த நன்றிகளையும், பாராட்டுகளையும் மீண்டும் ஒருமுறை மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் தமிழக முதல்வருக்கு தெரிவித்துக்கொள்கிறோம். ஜனநாயகம் காக்கும் அறப்போரில் தமிழ்நாடு எப்போதும் முதல் வரிசையில் முன்னிற்கும் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.