![Banana farmers should be given proper compensation "MRK Panneerselvam demand!](http://image.nakkheeran.in/cdn/farfuture/cLozyfr-ZllU0x5SdopOgKhOV4a8tdCHyzL6l_2PNr0/1596390937/sites/default/files/inline-images/ghtutu.jpg)
விற்பனையின்றி வாழை விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், குறிஞ்சிப்பாடி தி.மு.க சட்டமன்ற உறுப்பினருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
"கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி தொகுதிக்குட்பட்ட குறிஞ்சிப்பாடி மற்றும் கடலூர் வட்ட பகுதிகளிலும் மலை கிராமமான இராமாபுரம் அதனை சுற்றியுள்ள 30-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் உள்ள 200-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் முக்கனிகளில் ஒன்றான வாழை பயிரிட்டு வருகின்றனர். வாழையில் பூவன், ஏலக்கி, செவ்வாழை, கற்பூரவல்லி, ரஸ்தாளி, நேந்திரன், நாடு சக்கை போன்ற பல்வேறு ரக வாழைகள் சுமார் 10 ஆயிரம் ஏக்கரில், ஆடிமாத பருவத்தில் பயிரிடப்பட்டுள்ளன. கடந்த நான்கு மாதங்களாக வாழைத்தார் அறுவடை செய்து வருகின்றார்கள்.
அதேசமயம் வாழை அறுவடை காலம் ஆரம்பிக்கும் போது கொடிய கரோனா நோய் ஆரம்பமாகிவிட்டது. கரோனா நோய் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டு எந்த செயல்பாடும் இல்லாமல் போனது. கடந்த வருடம் வாழைத்தார் ரூபாய் 400லிருந்து ரூ.500 வரை விற்பனை செய்யப்பட்டது. ஏலக்கி போன்ற உயர் ரக வாழை கடந்த வருடம் ஒரு கிலோ ரூபாய் 60 வரை விற்பனை செய்யப்பட்டது. இதனால் வாழை விவசாயிகள் மகிழ்ச்சியில் இருந்தனர். இந்த வருடம் கரோனா நோய் தொற்று மற்றும் ஊரடங்கு காரணமாக பூவன் வாழை தார் ஒன்று ரூ. 70, 80, 90, 100 என விற்பனையாகின்றன. ஏலக்கி 1 கிலோ ரூபாய் 20, 22, 30 என விற்பனையாகின்றன. வாழை வாங்குவதற்கு வியாபாரிகள் வருவதும் இல்லை. இதனால் வாழை தார் மரத்திலேயே பழுத்து வீணாகின்றன.
வாழையை விளைவிக்க ஒரு தார் மீது ரூபாய் 150 லிருந்து 200 ரூபாய் வரை செலவாகின்றன. சூறாவளி காற்றில் இருந்து பாதுகாக்க சவுக்கு கழி கட்ட ரூபாய் 50 செலவாகின்றன. வாழை விற்பனைக்காக மும்பை, ஆந்திரா, கேரளா, பெங்களூரு போன்ற வெளி மாநிலங்களுக்கும் அதிகப்படியான அளவில் ஏற்றுமதியாகும்.தமிழகத்திலுள்ள சென்னையில் கோயம்பேடு அதனை சுற்றியுள்ள பெரு நகரங்களுக்கும் பல வெளி மாவட்டங்களுக்கும் தினமும் வாழை ஏற்றுமதியாகும்.
ஆனால் இவைகள் அனைத்தும் முடங்கியுள்ளதால் வாழை விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு ஏக்கருக்கு பயிர் செலவு ரூபாய் ஒன்றரை லட்சத்திலிருந்து இரண்டு லட்சம் வரை செலவாகிறது. செலவு செய்து ஒரு ஏக்கருக்கு ரூபாய் 70 ஆயிரத்திற்கு கூட விற்பனை செய்ய முடியவில்லை. இதனால் வாழை விவசாயிகள் தேசிய வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், தனி நபர் கடன்கள் என வாங்கிய கடனை கட்ட முடியாமல் வேதனையில் உள்ளனர். சூறாவளி காற்று ஒரு பகுதியை மட்டும் பாதிக்கும். ஆனால் கொரோனா நோய் ஊரடங்கால் வாழை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முற்றிலுமாக பாதிக்கப்பட்டு விட்டது.
எனவே அரசு பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற தேசிய, கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடனை தள்ளுபடி செய்வதோடு மட்டுமல்லாமல் நஷ்ட ஈடாக ஏக்கருக்கு ரூபாய் 50,000 வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்" என அவர் கூறியுள்ளார்.