தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கரோனா தடுப்புப் பணிகள் மற்றும் கரோனா தடுப்பூசிப் போடும் பணிகளை தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் வெளியே செல்லும் போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்; சமூக இடைவெளியைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும்; கைகளை அடிக்கடி சோப்பு (அல்லது) கிருமிநாசினி கொண்டு கழுவ வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றன.
இருப்பினும் தமிழகத்தில் இளைஞர்களும் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், திரையுலகினர் அதிகளவில் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றன.
அந்த வகையில், தமிழக சுற்றுலாத்துறை அமைச்சரும், ராசிபுரம் சட்டமன்ற உறுப்பினருமான மதிவேந்தனுக்கு செய்யப்பட்ட கரோனா மருத்துவப் பரிசோதனையில், அவருக்குத் தொற்று இருப்பது உறுதியானது. ஏற்கனவே, தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியிருந்தது. இதனால் அமைச்சரவைக் கூட்டத்தில் இரண்டு அமைச்சர்களும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.