தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளும், சில மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் மக்களவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளும் நாளை (02/05/2021) எண்ணப்பட்டு, நாளையே தேர்தல் முடிவுகளும் வெளியாகவுள்ளது. கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி வாக்கு எண்ணிக்கையை நடத்துவதற்கான ஏற்பாடுகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் செய்துள்ளது.
வாக்கு எண்ணிக்கையையொட்டி, தமிழகத்தில் உள்ள 'டாஸ்மாக்' கடைகளுக்கு இன்று (01/05/2021) முதல் இரண்டு நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்று (30/04/2021) தமிழகம் முழுவதும் உள்ள 'டாஸ்மாக்' கடைகளில் மதுப்பிரியர்கள் குவிந்தனர். நேற்று (30/04/2021) ஒரே நாளில் மட்டும் 'டாஸ்மாக்' கடைகளில் ரூபாய் 292.09 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது. இதில், அதிகபட்சமாக சென்னை மண்டலத்தில் ரூபாய் 63.44 கோடிக்கும், மதுரை மண்டலத்தில் ரூபாய் 59.63 கோடிக்கும் மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது. அதேபோல், சேலம் மண்டலத்தில் ரூபாய் 56.72 கோடிக்கும், திருச்சி மண்டலத்தில் ரூபாய் 56.38 கோடிக்கும், கோவை மண்டலத்தில் ரூபாய் 56.37 கோடிக்கும் மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது.