தமிழகத்தில் ஐ.பி.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, சென்னை மாநகரக் காவல் ஆணையராக இருந்த மகேஷ்குமார் அகர்வால் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை மாநகரக் காவல் ஆணையராக சங்கர் ஜிவால் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக உளவுத்துறை ஏ.டி.ஜி.பி.யாக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், தமிழக சட்டம் - ஒழுங்கு ஏ.டி.ஜி.பியாக ஜெயந்த் முரளிக்கு பதில் தாமரைக்கண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
உளவுத்துறை ஏ.டி.ஜி.பி. : டேவிட்சன் தேவாசீர்வாதம்!
1995ஆம் ஆண்டு ஐ.பி.எஸ். பிரிவு அதிகாரியான டேவிட்சன் தேவாசீர்வாதம், தற்போது கோவை மாநகரக் காவல்துறை ஆணையராக உள்ளார். 2015ஆம் ஆண்டு ஐ.ஜி. ரேங்கில் உளவுத்துறைத் தலைவராக சிறிது காலம் பணியாற்றியவர். தீவிரவாதிகளின் நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் க்யூ பிரிவில் எஸ்.பி.யாகவும் பணியாற்றியுள்ளார். மதுரை மாநகரக் காவல்துறை ஆணையராகவும், நிர்வாகப் பிரிவு ஐ.ஜி.யாகவும், மேற்கு மண்டல ஐ.ஜி.யாகவும் பணியாற்றியுள்ளார். சிறந்த காவல் பணிக்கான குடியரசுத் தலைவர் விருதைக் கடந்த ஜனவரி மாதம் பெற்றார். உளவுத்துறை ஐ.ஜி.யாக இருக்கும் சி. ஈஸ்வரமூர்த்தி, ஏ.டி.ஜி.பி. பணிகளையும் கவனித்துவந்த நிலையில் தேவாசீர்வாதம் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சட்டம் - ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.: தாமரைக்கண்ணன்!
ஐ.பி.எஸ். அதிகாரி தாமரைக்கண்ணன் தற்போது காவல்துறையின் நல்வாழ்வுப்பிரிவு ஏ.டி.ஜி.பி.யாக உள்ளார். 2012ஆம் ஆண்டு சென்னை வங்கிக் கொள்ளை வழக்கில் ஐந்து பேர் சுட்டுக்கொல்லப்பட்டபோது, கூடுதல் காவல் ஆணையராக பதவி வகித்தவர்.
சென்னை மாநகரக் காவல் ஆணையர்: சங்கர் ஜிவால்!
சென்னை மாநகரக் காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வாலுக்கு பதிலாக நியமிக்கப்பட்டிருக்கும் சங்கர் ஜிவால், 1990ஆம் ஆண்டு ஐ.பி.எஸ். பிரிவு அதிகாரி ஆவார். இவர், சத்தியமங்கலத்தைத் தலைமையிடமாகக் கொண்ட சிறப்பு அதிரடி படைப் பிரிவில் ஆறு ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். திருச்சி மாநகரக் காவல் ஆணையராகப் பதவி வகித்தபோது, பூட்டப்பட்டிருக்கும் வீடுகளை எஸ்.எம்.எஸ். மூலம் கண்காணிப்பதை அறிமுகப்படுத்தினார். உள்நாட்டு பாதுகாப்பு பிரிவில் ஐ.ஜி.யாகப் பணியாற்றியபோது நவீன தொழில்நுட்பங்களைப் புகுத்தியதில் முக்கியப் பங்கு வகித்துள்ளார். 2004 - 2006 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் தென்மண்டல இயக்குநராக இருந்தபோது, நாட்டிலேயே அதிகளவில் ஹெராயின் பறிமுதல் செய்துள்ளார். சிறந்த காவல் பணிக்காக கடந்த 2019ஆம் ஆண்டு குடியரசுத்தலைவரின் பதக்கம் பெற்றுள்ளார்.