சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் இன்று (23/02/2021) காலை 11.00 மணிக்கு சட்டப்பேரவையின் கூட்டம் கூடியது. அதைத் தொடர்ந்து, 2021 - 2022 ஆம் நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை தமிழக துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பேரவையில் தாக்கல் செய்தார். இவர் தாக்கல் செய்த 11 ஆவது பட்ஜெட் இதுவாகும். 15வது சட்டப்பேரவையின் கடைசிக் கூட்டத்தொடர் என்பதாலும், சட்டமன்றத் தேர்தல் வருவதாலும் வாக்காளர்களைக் கவர பல்வேறு சலுகைகள் மற்றும் புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதன் தொடர்ச்சியாக, பட்ஜெட் உரையை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாசிக்கத் தொடங்கியபோது குறுக்கிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள், தங்களுக்குப் பேச அனுமதி கோரி சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டனர். இருப்பினும் உறுப்பினர்களின் அமளிக்கிடையே பட்ஜெட் உரையை ஓ.பன்னீர்செல்வம் வாசித்து வருகிறார்.
இதனிடையே, இடைக்கால பட்ஜெட் உரையைப் புறக்கணித்து பேரவையில் இருந்து தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.