கடந்த பிப்ரவரி 23- ஆம் தேதி, சென்னை கலைவாணர் அரங்கத்தில் சட்டப்பேரவையின் கூட்டம் கூடியது. இந்தக் கூட்டத்தில், 2021 - 2022 ஆம் நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை தமிழக துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பேரவையில் தாக்கல் செய்து, உரையாற்றினார்.
அதைத் தொடர்ந்து, இன்று (25/02/2021) மீண்டும் சட்டப்பேரவைக் கூடியது. அப்போது, மறைந்த சேலம் சித்த வைத்தியர் சிவராஜ் சிவக்குமார், சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள், உத்தரகாண்ட் வெள்ளத்தில் உயிரிழந்தவர்கள் ஆகியோருக்குப் பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பேரவையில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சட்டப்பேரவையின் விதி எண் 110-ன் கீழ் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். முதல்வர் கூறியதாவது, "அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது 59- லிருந்து 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. வரும் மே மாதம் 31- ஆம் தேதிக்குள் ஓய்வுபெறும் அரசு ஊழியர்கள் அனைவருக்கும் ஓய்வு வயது பொருந்தும். பொதுத்தேர்வின்றி 9, 10, 11 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் ஆல் பாஸ்" எனத் தெரிவித்துள்ளார்.
12- ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்ட நிலையில், 10- ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வின்றி ஆல் பாஸ் என முதல்வர் அறிவித்துள்ளார். கடந்த ஆண்டும் மாணவர்கள் பொதுத்தேர்வின்றி தேர்ச்சிப் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.