கரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக, சென்னை தலைமைச் செயலகத்தில் மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்திவருகிறார்.
இந்த ஆலோசனையில் சென்னை, சேலம், செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை, திருச்சி, மதுரை, கரூர், கடலூர், திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களின் ஆட்சியர்கள், காவல்துறை உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்ட கூடுதல் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் மே 24ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், தமிழகத்தில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இந்த நிலையில், சேலம், கோவை, சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், கூடுதல் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை மேலும் நீட்டிக்கலாமா என்பது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை நடத்திவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை (22/05/2021) சென்னை தலைமைச் செயலகத்தில் மருத்துவ நிபுணர் குழு மற்றும் அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் குழுவுடன் ஆலோசனை நடத்துகிறார்.
இந்த ஆலோசனைக்குப் பிறகு தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டிப்பது அல்லது கூடுதல் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கில் தளர்வுகளை அளிப்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு நாளை (21/05/2021) மாலை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய சூழலில் தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.