தமிழக சட்டப்பேரவையின் சபாநாயகராக ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் அப்பாவு போட்டியின்றி தேர்வானார். வேறு யாரும் மனுத்தாக்கல் செய்யாததால் துணை சபாநாயகராக கீழ் பெண்ணாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் கு. பிச்சாண்டி தேர்வானார்.
வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்கான அவகாசம் இன்று (11/05/2021) மதியம் 12.00 மணியுடன் முடிந்ததால் இரண்டு பேரும் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டனர்.
சட்டப்பேரவையின் சபாநாயகராக தேர்வு செய்யப்பட்ட அப்பாவு குறித்து பார்ப்போம்!
ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான அப்பாவு, சட்டப்பேரவை பணியில் நீண்ட அனுபவம் பெற்றவர். கடந்த 1996ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பிலும், 2001ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் சுயேச்சையாகவும், 2006ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் திமுக சார்பிலும் போட்டியிட்டு சட்டப்பேரவை உறுப்பினர் ஆனார்.
2016ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோற்ற அப்பாவு, தற்போது நடந்து முடிந்த தேர்தலில் அதே ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று, தற்போது சபாநாயகராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
துணை சபாநாயகராகத் தேர்வு செய்யப்பட்ட கு.பிச்சாண்டி குறித்து பார்ப்போம்!
கு.பிச்சாண்டி 1989, 1996, 2001, 2006 ஆம் நடந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்களில் திருவண்ணாலை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1984- ஆம் ஆண்டு திருவண்ணாமலை நகராட்சி வார்டு உறுப்பினராக இருந்த கு.பிச்சாண்டி 1996- ஆம் ஆண்டு வீட்டு வசதித்துறை அமைச்சரானார். அதைத் தொடர்ந்து, கடந்த 2016- ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கீழ்பெண்ணாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில், தற்போது நடந்து முடிந்த தேர்தலிலும் மீண்டும் கீழ்பெண்ணாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த நிலையில் கு.பிச்சாண்டி துணை சபாநாயகராகப் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதனிடையே, 16- வது தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று (11/05/2021) காலை 10.00 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் கூடியது. இதில், புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.