தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (13/09/2021) பேசிய தமிழ்நாடு நிதித்துறை மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், "தேர்வு முகமைகள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழி பாடத்தாள் தகுதித் தேர்வாகக் கட்டாயமாக்கப்படும். அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் தாமதமானால் நேரடி நியமன வயது உச்ச வரம்பு இரண்டு ஆண்டாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அரசுப் பணிகளில் பெண்களுக்கான இடஒதுக்கீடு 30% லிருந்து 40% ஆக உயர்த்தப்படும்.
கரோனாவால் பெற்றோரை இழந்த இளைஞர்களுக்கு அரசுப் பணியிடங்களில் முன்னுரிமை அளிக்கப்படும். முதல் தலைமுறை பட்டதாரிகள், அரசுப் பள்ளிகளில் தமிழ் மொழியில் படித்தோருக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை அளிக்கப்படும்" எனத் தெரிவித்தார்.
இதனிடையே, நீட் தேர்வுக்கு விலக்கு கோரி கொண்டுவரப்பட்ட மசோதா தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேறியது. பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்த நிலையில், அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் நீட் விலக்கு மசோதா நிறைவேறியுள்ளது.