தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு இன்று (10/05/2022) பதிலளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "தமிழகத்தில் வன்முறை, சாதிச்சண்டை, மத மோதல், அராஜகம், துப்பாக்கிச் சூடு இல்லை. புதிய முதலீடுகள் இதுவரை இல்லாத அளவுக்கு தமிழகம் நோக்கி வருகிறது. இந்தியாவிலேயே அமைதியான, பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு என நற்பெயர் கிடைத்திருக்கிறது. காவல்துறையை யாரும் கை நீட்டி குற்றம் சொல்ல முடியாத துறையாக இருக்க வேண்டும். குற்றங்களே நடக்காத வகையில் சூழலை உருவாக்கித் தருவதே காவல்துறையினரின் பணி.
குற்றங்களே நடக்காத வகையில், சூழலை உருவாக்க காவல்துறையினர் திட்டமிட வேண்டும். குட்கா, போதைப்பொருள் விற்பனையை இரும்புக் கரம் கொண்டு போலீஸ் அடக்க வேண்டும். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என பாராமல், அழுத்தம், சிபாரிசுக்கு அடிபணியாமல் போலீஸ் செயல்பட வேண்டும். எந்த போதைப்பொருள் நடமாட்டமும், தமிழ்நாட்டில் இருக்கக் கூடாது. கடந்த ஓராண்டு காலத்தில் அனைத்து துறைகளும் எத்தகைய வளர்ச்சி பெற்றுள்ளது என்பதை அறிந்துள்ளீர்கள். காவல்துறையினர் ஒவ்வொரு வரும் விமர்சனத்திற்கு இடமில்லாமல் பணியாற்ற வேண்டும்.
அங்கு ஒன்றும், இங்கு ஒன்றும் நடந்த சம்பவத்தை வைத்து ஒட்டுமொத்த காவல்துறையைக் குறைகூறக் கூடாது. தமிழ்நாட்டில் கூலிப்படையை இல்லாத அளவுக்கு அதை துடைத் தெரியுங்கள். மதம், சாதி, வன்முறையைத் தூண்டும் பேச்சுகள் தடுக்கப்பட வேண்டும்; சமூக வலைத்தளங்களில் வன்முறையைத் தூண்டுவோரைக் கண்காணிக்க வேண்டும். குழந்தைகளுக்கு எதிரான, இணையவழி குற்றங்கள் குறித்த விசாரணைக்கு முன்னுரிமை தரப்படும். குற்றங்கள் முன்கூட்டியே தடுக்கப்பட்டுள்ளன; அதை மீறி நடந்தாலும் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
தொழிற்சாலைப் பகுதிகளில் குற்றங்களைத் தடுக்க தனி காவல்துறைப் படை அமைக்கப்பட்டுள்ளது. அரசு எடுத்த நடவடிக்கைகள் மூலம் திருட்டு வழக்குகளில் ரூபாய் 144 கோடி சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன. விநாயகர் சதுர்த்தி, ரம்ஜான், கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களின் போது காவல்துறை சிறப்பாகப் பாதுகாப்பு அளித்துள்ளது. ஓராண்டில் 268 கொலைகளை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள். குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து மீட்புப் பணிகளில் தமிழகம் முன்னின்று களப்பணியாற்றியுள்ளது.
அ.தி.மு.க. ஆட்சியில் இருந்ததை விட, கடந்த ஓராண்டில் கொலை, கொள்ளை சம்பவங்கள் குறைந்தே இருக்கின்றன. கூலிப்படை விரைவில் முற்றிலும் ஒழிக்கப்படும். எந்தச் சூழலிலும் துப்பாக்கிச்சூடு என்பது ஏற்கக் கூடியது அல்ல. கொடுங்குற்றம், கூலிப்படை விவகாரத்தில் தி.மு.க. அரசு ஈவு இரக்கமின்றி நடவடிக்கை எடுக்கிறது. கைது செய்யப்பட்டுள்ளவர்களை நீதிமன்ற வழிகாட்டுதலின்படி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும்.
கஞ்சா. குட்கா போதைப்பொருட்கள் புழக்கம் கடந்த ஆண்டுகளை விட குறைந்துள்ளது. தமிழகத்தில் லாக்கப் குற்றங்கள் இனி நடக்காமல் தடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. விசாரணை கைதிகள் உயிரிழப்பு எந்த ஆட்சியில் நடந்திருந்தாலும் அதை நியாயப்படுத்த முடியாது. கஞ்சா பயிரிடுவோரைக் கண்டறிந்து கைது செய்து அவர்களுக்கு மாற்றுத்தொழில் செய்ய ஏற்பாடு செய்யப்படும். 'ஒழிப்பு ஒருபுறம், விழிப்புணர்வு இன்னொருபுறம்' என்ற வகையில் கஞ்சா ஒழிப்பில் அரசு ஈடுபட்டுள்ளது." இவ்வாறு முதலமைச்சர் தெரிவித்தார்.