கரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து காணொளி மூலம் இன்று (13/01/2022) மாலை 04.45 மணிக்கு அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்களுடன ஆலோசனை நடத்தினார். பரிசோதனைகளை அதிகப்படுத்துவது, தடுப்பூசிப் போடும் பணிகளை விரைவுப்படுத்துவது, முன்களப் பணியாளர்கள், 60- வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் தடுப்பூசியை விரைந்து செலுத்துவது, மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்டவைக் குறித்து பிரதமர் ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனையின் போது பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "கரோனா தடுப்பு நடவடிக்கையாக, தமிழ்நாட்டில் தடுப்பூசி செலுத்தும் பணி முழு வீச்சில் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் கூடுதல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்கள் ஆர்வமுடன் முன் வருகின்றனர். தமிழ்நாட்டில் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு 74% தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது, தொற்று பரவலைத் தடுப்பதற்கான ஆலோசனை அனைத்து அதிகாரிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. கரோனா தடுப்பு பணியில் மத்திய அரசின் அனைத்து முயற்சிகளிலும் தமிழ்நாடு துணை நிற்கும் ஒமிக்ரான் பரவலைத் தடுப்பதில் தமிழ்நாடு முழுமையாக தயார் நிலையில் உள்ளது" என்று உறுதியளித்தார்.
இந்த ஆலோசனையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் மனசுக் மாண்டவியா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் காணொளி மூலம் கலந்துக் கொண்டனர். அதேபோல், சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப., மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் இ.ஆ.ப. உள்ளிட்டோர் காணொளி மூலம் கலந்து கொண்டனர்.