தமிழகத்தில் கரோனா பாதிப்பு குறிப்பிட்ட அளவில் தொடர்ந்து இருந்து வரும் நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கைள், கரோனா தடுப்பூசி போடும் பணிகள் ஆகியவற்றை தமிழ்நாடு அரசு துரித கதியில் முடுக்கிவிட்டுள்ளது. ஞாயிறு பொதுமுடக்கம், பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை, இரவு நேர ஊரடங்கு, கோயில்களை விடுமுறை நாட்களில் மூடுவது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளைத் தமிழக அரசு தொடர்ந்து செயல்படுத்தி வந்தது.
இந்தக் கட்டுப்பாடுகள் அனைத்தும் வருகின்ற 31ம் தேதியோடு நிறைவடைய இருக்கிற நிலையில் கட்டுப்பாடுகளை நீட்டிப்பதா? அல்லது தளர்வுகள் அளிப்பதா? என்பது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வந்தார். இந்நிலையில் தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'தமிழகத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை 30ஆம் தேதி முழு முடக்கம் ரத்து செய்யப்படுகிறது. நாளை முதல் (ஜன.28 ஆம் தேதி) இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்படுகிறது. தமிழகத்தில் பிப்ரவரி 1ம் தேதி முதல் அனைத்து வகுப்புகளும் நேரடியாக நடத்தப்படும்.
அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பயிற்சி நிலையங்கள் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பிப்ரவரி 1ஆம் தேதி முதல் செயல்படும். சமுதாய நிகழ்வுகள், அரசியல் கூட்டங்கள், பொதுமக்கள் கூடும் நிகழ்ச்சிகளுக்குத் தடை தொடரும். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு முறைகள் பின்பற்றப்பட வேண்டும். மழலையர் பள்ளிகள் செயல்பட அனுமதி இல்லை. பொருட்காட்சிகள் நடத்த அனுமதி இல்லை. அரசு மற்றும் தனியார் அமைப்புகளால் நடத்தப்படும் கலை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இல்லை. உணவு விடுதிகள், அடுமனைகள் உள்ளிட்ட இடங்களில் 50% வாடிக்கையாளர்களே உணவு அருந்த வேண்டும். திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் அதிகபட்சம் 100 நபர்கள் பங்கேற்க வேண்டும். இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 50 நபர்களுக்கு மிகாமல் அனுமதிக்கப்படலாம். துணிக்கடைகள் மற்றும் நகைக் கடைகளில் 50 சதவீத வாடிக்கையாளர்களுக்கு அனுமதி. அழகு நிலையம், சலூன், கேளிக்கை விடுதிகள், உடற்பயிற்சி கூடங்கள், திரையரங்குகள் ஒரே நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இயங்க வேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.