தமிழ் சினிமாவில் எழுத்தாளர், இயக்குநர், நடிகர் என பன்முக திறமைகளைக் கொண்ட ஆர்.என்.ஆர். மனோகர் இன்று (17.11.2021) மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இவர் அஜித் நடிப்பில் வெளியான ‘என்னை அறிந்தால்’, ‘வேதாளம்’, ‘விஸ்வாசம்’, விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘நானும் ரவுடிதான்’, ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘மிருதன்’ உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். மேலும், ‘மாசிலாமணி’, ‘வேலூர் மாவட்டம்’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். ஆர்.என்.ஆர். மனோகர் சென்னையில் உள்ள தன் வீட்டில் மாரடைப்பால் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவரது மறைவு தமிழ் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் இவரது இறப்புக்கு இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.
அண்மையில் கரோனா ஊரடங்கின்போது சென்னை கே.கே.நகரில் உள்ள பத்மா சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் என்பவர் ஆன்லைன் வகுப்பின்போது மாணவிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியது தொடர்பான புகார் எழுந்து பரபரப்பை ஏற்படுத்தி அவர் கைது செய்யப்பட்டிருந்தார். இந்த விவகாரம் பூதாகரமான நிலையில், அதேபள்ளியில் படித்த ஆர்.என்.ஆர். மனோகரின் மகன் பள்ளி நிர்வாகத்தின் அலட்சியம் காரணமாக நீச்சல் குளத்தில் உயிரிழந்த சம்பவமும் பரபரப்பாகப் பேசப்பட்டது.
2012ஆம் ஆண்டு, அப்பள்ளி வளாகத்தில் ஆர்.என்.ஆர். மனோகரின் மகன் நீச்சல் பயிற்சியாளர் முன்னிலையில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அவருடன் 22 மாணவர்கள் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது டீ குடிப்பதற்காக நீச்சல் பயிற்சியாளர் வெளியில் சென்றுவிட்டதாகவும், அதுசமயம் ஆர்.என்.ஆர். மனோகரின் மகன் நீரில் மூழ்கி உயிரிழந்ததாகவும் தகவல் வெளியானது. இந்த சம்பவத்தைப் பற்றி மனோகர் குறிப்பிடுகையில், ''பயிற்சியாளர் பயிற்சி நேரத்தின்போது அவ்விடத்தில் இல்லாததினால் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது'' எனக் குற்றம்சாட்டியிருந்தார். ஆனாலும் பல முக்கிய பிரமுகர்கள் இதில் தலையிட்டு இந்தப் பள்ளி நிர்வாகத்தினைக் காப்பாற்றினார்கள் என தகவல்கள் வெளியாகின.
மகனை இழந்த எழுத்தாளரும், இயக்குநரும், நடிகருமான ஆர்.என்.ஆர். மனோகர் திடீரென்று உயிரிழந்தது திரைத்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.