ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி கோரிய வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
தூத்துக்குடியில் அமைந்துள்ள வேதாந்தா நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தின்போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். பல்வேறு தரப்பிலிருந்து இதற்கு கண்டனங்கள் எழுந்த நிலையில், ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஆலை நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் ஆலையை திறக்க அனுமதி வழங்க மறுத்ததது.
இந்த நிலையில், பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும் ஜிப்சம் உள்ளிட்ட பொருட்களை எடுக்கவும் அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா சார்பில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கை உடனடியாக விசாரித்து இடைக்கால உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என ஆலை நிர்வாகத்தின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், இடைக்கால மனு மீது தமிழக அரசு நான்கு வாரத்தில் பதில் அளிக்கவேண்டுமென உத்தரவு பிறப்பித்து விசாரணையை ஜூலை மாதத்திற்கு ஒத்தி வைத்தனர்.