Skip to main content

அமலாக்கத்துறை கைது செல்லும்; உறுதி செய்தது உச்சநீதிமன்றம்

Published on 07/08/2023 | Edited on 07/08/2023

 

Supreme Court has ruled that Senthilbalaji will be arrested by ed

 

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலியின் காரணமாகச் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் உயர்நீதிமன்ற அனுமதியோடு சென்னை காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதையடுத்து புழல் சிறைக்கு மாற்றப்பட்டு அங்கு மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார். 

 

முன்னதாக, செந்தில் பாலாஜி சட்ட விரோதக் காவலில் இருப்பதாக அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் நீதிபதிகள் நிஷா பானு மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். இதையடுத்து, இந்த வழக்கில் மூன்றாவது நீதிபதி சி.வி. கார்த்திகேயன் தீர்ப்பளிக்கையில், “இரண்டு நீதிபதிகள் அமர்வில் பரத சக்கரவர்த்தி கூறிய கருத்துடன் உடன்படுகிறேன். செந்தில் பாலாஜியை எப்போது காவலில் எடுக்கலாம் என்பது குறித்து ஏற்கனவே விசாரித்த 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு மீண்டும் விசாரிக்கும். எனவே செந்தில் பாலாஜி வழக்கின் இறுதித் தீர்ப்பை 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு வழங்கும்” எனத் தெரிவித்து இருந்தார். இதனைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது மனைவி மேகலா ஆகியோர் மேல்முறையீடு செய்திருந்தனர்.

 

இந்த நிலையில், அமைச்சர் செந்தில்பாலாஜியின் மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதி போபன்னா மற்றும் எம்.எம்.சுந்தரேசன் தலைமையிலான அமர்வு முன்பு செந்தில் பாலாஜி மேல் முறையீட்டு மனுக்கள் விசாரணைக்கு வந்த நிலையில், செந்தில்பாலாஜியின் கைது சட்ட விரோதம் இல்லை என்று கூறி மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்துள்ளனர். மேலும், செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கவும் அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்