நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவை பணியிட மாற்றம் செய்வதற்கான தடையை உச்ச நீதிமன்றம் நீக்கியுள்ளது.
நீலகிரியில் யானைகள் வழித்தடம் ஆக்கிரமிக்கப்படுவதை எதிர்த்து யானை ராஜேந்திரன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அவரது மனுவையும் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களையும் பார்த்த நீதிபதி, உடனடியாக நீலகிரி மாவட்டத்தில் யானைகள் வழித்தடத்தில் சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட ரிசார்ட்கள், உணவகங்கள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை மாவட்ட நிர்வாகம் அகற்ற வேண்டும். இதற்கு மேல் யானை வழித்தடத்தில் புதிய ரிசார்ட்களுக்கு அனுமதி வழங்கக் கூடாது என உத்தரவிட்டார். இதற்கான நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
இதற்கான வேலைகளில் ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா ஈடுபட்டுவந்த நிலையில், அவரை பணியிடை மாற்றம் செய்யும் சூழல் ஏற்பட்டது. இதனால் உச்ச நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல் ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவை பணியிட மாற்றம் செய்யக்கூடாது என யானை ராஜேந்திரன் சுட்டிக்காட்டிய நிலையில், உச்ச நீதிமன்றம் அவரை பணியிட மாற்றம் செய்யக் கூடாது என கடந்த 2019ஆம் ஆண்டு உத்தரவிட்டது. இந்நிலையில், நீலகிரி மாவட்ட ஆட்சியரை மாற்ற வேண்டும். நிர்வாக ரீதியாக சில மாற்றங்களைச் செய்ய வேண்டியது அவசியமாகிறது என்று தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் ஒரு இடைக்கால மனுவைத் தாக்கல் செய்திருந்தது.
இந்த இடைக்கால மனுவை இன்று (16.11.2021) விசாரித்த உச்ச நீதிமன்றம் நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவை பணியிட மாற்றம் செய்ய அனுமதியளித்துள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு முதல் நீலகிரி மாவட்ட ஆட்சியராக இன்னசென்ட் திவ்யா உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.