ஸொமேட்டோ செயலியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விகாஷ் என்ற நபர் நேற்று முன்தினம் (18.10.2021) உணவு ஆர்டர் செய்துள்ளார். ஆனால் அவர் ஆர்டர் செய்த உணவு அவருக்கு வழங்கப்படவில்லை. இதனால் ஸொமேட்டோவின் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்புகொண்ட அவர், இதுதொடர்பாக புகாரளித்ததுடன் பணத்தைத் திரும்ப அளிக்குமாறு கேட்டுள்ளார். இதுதொடர்பான உரையாடலின்போது, வாடிக்கையாளர் சேவை மைய ஊழியர், இந்தி நமது நாட்டின் தேசிய மொழி என்றும், எனவே அனைவரும் அதை தெரிந்துவைத்துக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சமூகவலைதளங்களில் ஸொமேட்டோ நிறுவனம் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
இதையடுத்து, சமூகவலைதளங்களில் எழுந்த எதிர்ப்பை தொடர்ந்து, தனது வாடிக்கையாளர் சேவை மைய ஊழியரின் செயலுக்கு ஸொமேட்டோ வருத்தம் தெரிவித்தது. இந்நிலையில், இந்தி மொழி தொடர்பாக நடிகர் கமல் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், "இந்தியா பல மொழிகளின் நாடு. அரசியலமைப்புச் சட்டத்தின்படி, நமக்கு தேசிய மொழி என்று எதுவும் இல்லை. என்றாலும் இந்தியே தேசிய மொழி என்ற மூடநம்பிக்கை நிறைய பேரை பிடித்தாட்டுகிறது. தெளிவுபடுத்த வேண்டியது நடுவண் அரசின் கடமை" என்று பதிவிட்டுள்ளார்.