முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சரும், கரூர் மாவட்ட அதிமுக செயலாளருமான எம்.ஆர். விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், கடந்த ஜூலை 22ஆம் தேதி சோதனை செய்தனர். அப்போது சென்னையில் உள்ள அவரது வீட்டிலும், கரூரில் 20 இடங்களிலும் இந்த சோதனை நடைபெற்றது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தார் என்று எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து கரூர் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி விஜயலட்சமி, சகோதரர் சேகர், பங்குதாரராக உள்ள நிறுவனங்கள், உறவினர்கள், உதவியாளர்கள் ஆகியோர் மீது 2021 பிரிவு 13(2), 13(1)(பி), 2018 12, 13 (2), 13(1)(பி) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
அதைத் தொடர்ந்து, அன்று 20க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்ற சோதனையில் லட்சக்கணக்கான பணம், பல கோடி மதிப்புள்ள சொத்துகள், காப்பீட்டு நிறுவனங்களில் செய்யப்பட்ட முதலீடுகள் மற்றும் நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த நிலையில், இன்று (30.09.2021) சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விஜயபாஸ்கருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
இன்று நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், உள்ளாட்சித் தேர்தல் பணிகளில் இருப்பதால் இன்று விசாரணைக்கு வர இயலாது என்றும் வேறொரு நாளில் விசாரணைக்கு வருவதாகவும் பதில் அளித்துள்ளார்.