கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகேயுள்ள எ.சித்தூரில் உள்ளது திரு ஆரூரான் சர்க்கரை ஆலை. இந்த ஆலைக்கு கரும்பு அனுப்பிய விவசாயிகளுக்கு கடந்த சில ஆண்டுகளாக சுமார் 40 கோடி நிலுவை பாக்கி உள்ளது. அதேபோல் விவசாயிகள் பெயரில் வங்கியில் சுமார் 13 கோடிக்கு ஆலை நிர்வாகம் கடன் பெற்றுள்ளது. விவசாயிகளுக்கான நிலுவை பாக்கி தராமலும், கடன் தொகை வங்கிகளுக்கு செலுத்தாமலும் உள்ளது. இதனால் விவசாயிகள் வங்கிகளில் பெறும் வேறு வகையிலான கடன்கள் மற்றும் வருவாயை வங்கிகள் விவசாயிகளிடமிருந்து அபகரித்துக் கொள்கிறது. இதனால் நிலுவைத் தொகையை உடனே வழங்க கோரியும், வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்யக் கோரியும் விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கரும்பு விவசாயிகளின் சங்கம் சார்பில் இன்று நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் அனைத்து விவசாயிகள் சங்க செயலாளர் வழக்கறிஞர் தங்க.தனவேல் தலைமையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக சித்தூர் வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருந்து கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டவாறு பேரணியாக விவசாயிகள் சர்க்கரை ஆலைக்கு வந்தனர்.
விவசாயிகளுக்கு முழு தொகையையும் ஒரே தவணையில் கொடுக்க வேண்டும், விவசாயிகள் பெயரில் வங்கியில் வாங்கிய கடனை முழுவதுமாக ஆலை நிர்வாகம் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், எதிர்காலத்தில் மீண்டும் இதே நிலைமை நடைபெறாமல் இருக்க, தமிழக முதல்வர் தலையிட்டு, ஆரூரான் சர்க்கரை ஆலையை தமிழக அரசு ஏற்று நடத்த வேண்டும், திரு ஆரூரான் சர்க்கரை ஆலை, ஸ்ரீ அம்பிகா சர்க்கரை ஆலைக்கு அனுப்பிய விவசாயிகளின் கரும்பு பணத்தை உடனடியாக பெற்று தரவேண்டும் என வலியுறுத்தி, எந்த வகையிலும் நிலுவைத் தொகை இல்லாத சூழலில் இருந்தால் மட்டுமே ஆலையை இயக்க அனுமதிப்போம் என காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காத்திருப்பு போராட்டத்தில் தமிழக உழவர் முன்னணி தலைவர் முருகன்குடி முருகன், பா.ஜ.க விவசாய அணி மாவட்ட தலைவர் செந்தில்குமார், தமிழ்த்தேசிய பேரியக்க தலைமைச் செயற்குழு உறுப்பினர் மா.மணிமாறன், நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை மாவட்ட செயலாளர் கதிர்காமன், தமிழ்நாடு அனைத்து விவசாய சங்க மாவட்ட தலைவர் கோகுலகிருஷ்ணன், ஜனநாயக விவசாய சங்கம் ராமர், கந்தசாமி அவர்களும் இந்திய ஜனநாயக கட்சி விவசாய அணி தலைவர் மேமாத்தூர் அண்ணாதுரை, தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் ராஜா, மணிமுத்தாறு பாதுகாப்பு குழு பாலு, ராஜேந்திரன், நாகராஜன், கச்சிமயிலூர் ஸ்டாலின், ஒன்றிய கவுன்சிலர்கள் சரவணன், செந்தில்குமார் பாக்கியராஜ், பெண்ணாடம் விவசாய சங்க தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் முன்னோடி விவசாயிகள் பலரும் கலந்து கொண்டனர்.
பின்னர் வேப்பூர் வட்டாட்சியர் மோகன் மற்றும் டி.எஸ்.பி ஆரோக்கியராஜ் ஆகியோர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். விவசாயிகளின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்ததுடன் சர்க்கரை ஆலையில் மாற்று பணிகள் நடைபெறுவதை தடுக்கும் வகையில் ஆலையை மூடி சீல் வைத்தார், அதையடுத்து விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.