பெரம்பலூர் பாலக்கரையில் இன்று மாலை மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை, 6 பேர் கொண்ட கும்பல் கட்டை மற்றும் குச்சியால் சராமரியாகத் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகச் சாலையில் உள்ள ஹோட்டலில் மாஸ்டராக வேலைபார்த்து வருபவர் அத்தியூரைச் சேர்ந்த கருணாநிதி மகன் அருண் (வயது 20). இவர், அவரது சூப்பர்வைசர் கார்த்திக் என்பவருடன் பாலக்கரைக்கு மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். அப்போது, அங்கு நின்றிருந்த வினோத், மணிகண்டன் ஆகிய இருவரும் பைக்கில் வந்த அருணை மடக்கி 'நெடுவாசலா?' எனக் கேட்டு, பைக்கின் கண்ணாடியை உடைத்துள்ளனர். அப்போது, அருகில் இருந்த சிற்றுண்டிக் கடை முன்பு கிடந்த கட்டையை எடுத்து சராமரியாகத் தாக்கியுள்ளனர். தாக்குதலை தாங்கமுடியாத அருண் தப்பிப்பதற்காக ஓடினார். அப்போதும், அவர்கள் அருணை விடாமல் தாக்கியுள்ளனர்.
பின்னர், அங்கிருந்த மக்கள் இதுகுறித்து போலீசுக்குத் தகவல் சொல்லியுள்ளனர். விரைந்துவந்த போலீசார், வினோத்தை மடக்கிப் பிடித்து, வேனில் ஏற்றிச்சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், “மாலை 3 மணிக்கு நெடுவாசலில் ஒருவரை தாக்கிவிட்டு வந்தோம். அவர்களின் உறவினர்கள்தான் எங்களைத் தாக்க வருகிறார்கள் என நினைத்து ஓட்டல் ஊழியரை தாக்கிவிட்டோம்" எனத் தெரிவித்தார். வினோத், தமிழ்ச்செல்வன் ஆகிய இருவர் மீதும் கொலை, கொள்ளை வழக்குகள் இருப்பதும் ரவுடிப் பட்டியலில் இவர்களின் பெயர்கள் இருப்பதும் பின்னர் தெரியவந்தது. புதிய வரவாக இணைந்துள்ள 4 புதிய ரவுடிகளையும் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.